பக்கம்:அகமும் புறமும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 295


ஆட்சியாளர்க்கு

உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதஇனம் தோன்றி வளருமுன்பே இத்தமிழகத்தில் மனிதன் தோன்றிவிட்டான் என்பது இற்றை நாளில் நிலநூல் அறிஞர் பலரும் ஒப்புகின்ற முடிபாகும். மிகப் பழைய காலத்தில் தோன்றிவிட்ட காரணத்தால் இத்தமிழனுடைய நாகரிகமும் பழமையானதாகும். சரித்திரம் எட்டிப்பாராத அந்த நாளிலேயே இத்தமிழர் செம்மையான அரசியல் அமைப்பைப் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிய முடிகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல், பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். ‘புறநானூறு’ என்ற நூல், தொகுக்கப்பெற்றது எக்காலம் என்பது இன்று உறுதியாக அறியக்கூடவில்லை. எனினும், கிறிஸ்து நாதர் தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டாவது முற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. தொகுத்தது அந்த நாளில் என்றால், அதில் காணப்பெறும் பாடல்கள் பல அதற்குக் குறைந்த அளவு ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டு முற்பட்டாவது தோன்றி இருத்தல்கூடும். எனவே, புறநானூற்றில் வரும் கருத்துக்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை இத்தமிழர் கொண்ட கருத்துக்கள் என்று கூறுவதில் அதிகம் பிழை இருக்க இயலாது.

இத்தகைய பெருநூலில் ஆட்சியாளர் இன்றும் கவனிக்க வேண்டிய குறிப்புக்கள் மிகப் பல உள.

பதவியால் மாற்றம்

ஒருவர் எத்துணைப் பெரிய பதவியில் இருப்பினும் தாமும் மற்றவரைப் போன்ற மனிதர்தாம் என்பதை அவர் உணரவேண்டும், இதை நாம் எடுத்துக் காட்டினால் பயன் விளையாது. எத்துணை நல்லவர்களாயினும், ஆட்சி கைக்கு வந்தவுடன், மனம் மாறிவிடுகின்றனர். இக்குறை