பக்கம்:அகமும் புறமும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304 • அகமும் புறமும்

விடுகிறது. காரணம், இடை நிற்போர்! எனவே, ஆள்வோருடைய குறிக்கோள் சிறந்ததாகவும் இருந்து, அது பயன்படவும் வேண்டுமாயின், ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஆள்வோர்கள் தக்கவர்களைத் தம்முடன் இருத்திக்கொள்ளுதல். உடன் இருக்கும் அத்தக்கவர்களாலே தான் ஆட்சியாளர் குறிக்கோள் நற்பயன் விளைத்தல் கூடும்.

அரசன் குறிக்கோள்

சோழன் நல்லுருத்திரன் என்பவன்–நாடாளும் சோழர்குடியில் பிறந்த மன்னன்–அரசாட்சியின் இந்த நுணுக்கத்தை அனுபவத்தில் கண்டான் போலும்! இதோ குறிக்கோளைக் கொண்டு செலுத்த உதவும் நண்பர்களைப் பற்றிப் பேசுகிறான் அவன்;

“நன்கு விளைந்து முற்றி வளைந்த நெல் கதிராகிய உணவைச் சிறிய இடத்தையுடைய வளையில் நிறைய வைக்கும் எலி முயன்றாற்போலச் சிறிய முயற்சியை உடையவர்களாகி, இருக்கும் தம்முடைய செல்வத்தை அனுபவிக்காமல் இறுகப் பிடிக்கின்ற பரந்த மனப்பான்மை இல்லாதவர்களுடன் பொருந்திய நட்பு இல்லாமல் போவதாக! தறுகண்மையுடைய பன்றியைப் புலி அடித்த பொழுது அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்துவிட்டதாயின், அன்று அவ்விடத்தில் உணவு உட்கொள்ளாமல் மறுநாள் பெரிய மலையின்கண் உள்ள தனது குகை தனிமைப்பட உணவை விரும்பிப் புறப்பட்டு வந்து பெரிய ஆண் யானையை நல்ல வலப்பக்கத்தில் விழும்படியாக அடித்து உண்ணும் புலி பசித்தாற்போலக் குறை இல்லாத நெஞ்சுரம் உடையவர்களின் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாக!” என்ற கருத்தில் பேசுகிறான் அவ்வரசப் புலவர்.