பக்கம்:அகமும் புறமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 • அகமும் புறமும்

இது எப்படி நிகழ்ந்தது? தலைவி உள்ளிட்ட எவர்க்கும் இதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இப்படி திடீரென்று தோன்றுகின்ற ஒரு மன நிலையைக் காதல் என்று கூறினர் இத்தமிழர்.

இதுபற்றி இப்பாடல் பகுதியில் எவ்வித விளக்கமும் இல்லையே? இது நாமாக இட்டுக் கட்டிக் கொண்டு கூறுவதா? என்று சிலர் நினைக்கலாம். இதனை இவ்வளவு விளக்கமாகப் பாடினால் இவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அதிலும் சிறப்பாக கபிலனாக இருக்கமுடியாது என்றால் இவ்விளக்கத்தை எங்கே பெறுகிறோம்.

இயற்கை வருணனைக் கூறுகின்ற பொழுது ஓர் அற்புதமான சொல் பெய்து இத்துணைப் பொருளையும் நாம் பெறுமாறு செய்துவிட்டார் பொய்யா நாவிற் கபிலர்.

மூங்கிலிற் காற்றடிக்க குழலோசை பிறப்பதும், அருவியில் முழவோசை எழுவதும், வண்டு யாழ் செய்வதும் மயில் ஆடுவதும் என்றும் மலைச் சாரலில் நிகழ்வனவே,

தினமும் நடைபெறும் இந்த மயிலின் ஆட்டத்தை அங்கேயே வாழும் குரங்குகள் பார்ப்பதும் இயல்பே. இதனைத்தான் புலவரும் கூறியுள்ளார். என்றாலும் அன்றாடம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று ஒரு புதுமை புகுந்துவிட்டது. இதனை ஒரு சொல்லின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

'மந்தி மருள்வன நோக்க' என்ற சொற்களைக் கவனிக்க வேண்டும். மயிலின் ஆட்டத்தைத் தினமும் காண்கின்ற மந்திகளுக்கு மருட்சி எங்கிருந்து வந்தது? மருட்சி வந்தது என்று புலவர் கூறுவதால் அன்றாடம் போலன்றி இந்த மயில் ஏதோ ஒரு புதுமையான முறையில் ஆடுகின்றது என்று மந்தி தெரிந்து கொள்கிறது என்னலாம்.