பக்கம்:அகமும் புறமும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 312

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே

(புறம். 165)

[நிலைபேறில்லாத இந்த உலகில் புகழை நிலை நாட்டிப் பலர் மாய்ந்தனர்]

புகழ்ப் பைத்தியம்

இத்தமிழருடைய புகழ்ப் பைத்தியம் மிகவும் ஆழமாய் இருந்ததென்பதைக் காட்ட நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரவியலும்.

“தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”

(குறள்–238)

என்று குறளாசிரியர் கட்டளை இடுமுன்பே இம்மக்கள் தம் வாணாளில் பெற வேண்டிய ஒரு குறிக்கோளாக இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது. இலக்கணம் இதற்குப் பெரியதோர் இடந்தந்து, “பாடாண்திணை” என்றதொரு திணையையே வகுத்துவிட்டது.

புகழடைய வழி

மனிதனாய்ப் பிறந்தவன் புகழ் ஈட்டியே தீரவேண்டும் என்றால், அதற்குரிய வழிகள் யாவை என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? வழிகள் பலவாக இருக்கலாம். எந்த வழியை மேற்கொண்டால் புகழ் பேசுகிறவர்கள் எளிமையாகப் புகழ்வார்கள்? அந்த வழியே சிறந்த வழி என்று நினைத்திருத்தல் கூடும் அக்கால மக்கள். மேலும், புகழ் ஈட்டும் வழி மூலமாகவே தம்முடைய மனக் கருத்தையும் முற்றுப் பெறச் செய்யக் கூடுமாயின், அது மிகவும் நலமானதாகப் பட்டிருக்கும். இயற்கையாக மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன்