பக்கம்:அகமும் புறமும்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313 • அகமும் புறமும்

மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது, யாரை வெறுக்கிறோமோ அவர் மேல் போர் தொடுத்து வெற்றி காணமுடிகிறது. இரண்டாவது, அவ்வாறு பெறும் வெற்றியே பிறர் புகழவும் காரணமாகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிற் பயன் பெறக் கூடுமாயின், வன்மைமிக்க அரசர்கள் போர், என்ற வழியை மேற்கொண்டதில் வியப்பிருத்தல் இயலாது. மேலும், அந்த அரசர்கள் புரியும் இந்தப் போர்களைத் தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர்; அம்மக்களும் இதனை நம்பினர்.

வெற்றி வெறி

பிறருடைய நாட்டின் மேல் போர் தொடுத்துச் செல்லுதல் அரசர்க்குரிய அறமாகவும் போற்றிக் கூறப்பெற்றது. தற்காப்புச் செய்யுமுறையில் போரிடுதல் அன்றியும், பிறர்மேல் படைகொண்டு வலுப் போருக்குப் போதலும் அறமெனவே கருதப்பெற்றது. புகழ் வேட்டையாடப் பிறருடைய நலத்தைப்பற்றிக் கவலை கொள்ளாமல் போரிடுதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டனர் அற்றைநாள் தமிழர். எவ்வளவு பெரிய அரசனும் இதற்கு விலக்காமாறு இல்லை. மேலும், ஓரிரண்டு போர்களில் வெற்றி கண்டு விட்டால், அது குடிப்பழக்கம் போல ஆகிவிடும். அவ்வெற்றி தந்த வெறி, மேலும் மேலும் போர்செய்யத் தூண்டும். தாம் இவ்வாறு போர் செய்து அதனால் பெறுவதாகக் கருதிய புகழ் உண்மையானதா என்று ஆராயக்கூட அவர்கள் முற்படவில்லை.

வாழ்வின் குறிக்கோள் போரன்று

அரசராய்த் தாம் பிறந்ததே போர்செய்யத்தான் என்று கூடப் பலர் கருதிவிட்டனர். இத்தகைய ஒரு நிலையில்