பக்கம்:அகமும் புறமும்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 314

அறிவுடைப் பெருமக்கள் சிலர் மனத்திலாதல் ஓர் ஐயம் தோன்றியிருத்தல் வேண்டும். கேவலம் போரிடுதல் ஒன்றுதானா புகழை வளர்க்கும்? இது தவிர இவ்வரசர் பெருமக்கள் செய்யத்தக்க நற்செயல்கள் வேறு இல்லையா? இவ்வாறு சிலர் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு பெற்ற விடைகளும் புறப்பாடல் முதலியவற்றில் காணக்கிடக்கின்றன. “மாங்குடி மருதனார்” என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க “மதுரைக்காஞ்சி” என்றதொரு நூலையே (எவ்வளவு பெரிய பாடல் அது!) இயற்றினார் என்றால், பழந்தமிழர் போர் வெறி என்ற பாலைவனத்தில் இது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகிறது. 782 அடிகளையுடைய அப்பாடலில், அப்புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லதோர் அறிவுரை வழங்குகிறார்.


பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த
விலங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே

(மதுரைக்காஞ்சி, 778–82)

(உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாதலின், நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக).

இப்புலவரே இம்மன்னனையே பாடும் புறப்பாட்டு ஒன்றில் இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்.


ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப..........

(புறம்–24)