பக்கம்:அகமும் புறமும்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315 • அகமும் புறமும்


இவ்வாறு இன்புற்று வாழ்வதே வாழ்க்கை எனப்படும் என்று அவர் கூறும் பொழுதுதான், இவ்வாறு செய்யாதவர்களுடைய வாழ்வு எவ்வளவு பயனற்றது என்பதையும் அறிய முடிகிறது.

ஏனைய வழியால் பெரும் புகழ்

போர் செய்தலையே தம் வாணாளின் குறிக்கோளாகக் கொண்ட இம்மன்னர்கள் புகழடைவதற்கு மேற்கொண்ட வழி சற்று விந்தையானதே! இதனைக் காட்டிலும் வேறு வழியில் வாழ்வதால் நல்லதொரு புகழை அடைய முடியும் என இவர்கள் ஏனோ நினைக்கவில்லை! ஆனால், இப்பேரரசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட குறிக்கோள் முற்றிலும் வேறானதாகக் காணப்படுகிறது. கடைஏழு வள்ளல்களைப் பற்றியும் இப்புறப்பாடல் முதலியன பேசுகின்றன. அவர்களும் புகழ் படைத்தவர்களாகவே உள்ளனர். என்றாலும் என்ன வேற்றுமை? புகழ் என்ற ஒன்றை அடைய முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளைக் கையாண்டுள்ளனர். யாருடைய வழி சிறந்தது? போர் வெறி கொண்டு, நாட்டிற்கு நன்மை என்ற பெயரால் தமிழர்களுடைய குருதியைத் தமிழ் மண்ணில் ஆறாகப் பெருகவிட்டுத் தம்முடைய மக்களும் தோற்ற மக்களும் ஒருசேர அவதிப்படச் செய்த இப்போர் வெறியர்களும் புகழடைந்துவிட்டதாகச் செருக்குற்றிருந்தனர். இவர்கள் செருக்கை வளர்க்கத் தமிழ்ப் புலவர்களும் காரணர்களாய் இருந்தனர். குறுநில மன்னர்கள் எழுவரை ஒரே நாளில் வென்றுவிட்டான் என்பதற்காகத் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை எத்தனை புலவர்கள் புகழ்ந்துள்ளனர்! அதுவும் அளவு மீறிப் புகழ்ந்துள்ளனர். நன்கு ஆராய்ந்து பார்த்தால், இதனை மிகப் பெரிய வெற்றிகளுள் ஒன்று என்றுகூடக் கூறவியலாது. தம்முடைய நாட்டைவிட்டுப்