பக்கம்:அகமும் புறமும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 316

பன்னூறு மைல்கள் கடந்து சென்று வேற்று நாட்டில் போர்கள் புரிந்து வெற்றி பெற்ற செங்கிஸ்கான் அலெக்ஸாந்தர் முதலானோருடன் ஒப்பு நோக்கினால் நெடுஞ்செழியன், கரிகாலன் போன்றார்கள் வெற்றி மிகச் சிறியதாகிவிடக் காண்கிறோம். ஆனால், அலெக்ஸாந்தர் கிரேக்கர்களுடனும், செங்கிஸ்கான் மங்கோலியருடனும் போரிடவில்லை. நெடுஞ்செழியனோ என்னில், தமிழருடன் போரிட்டான். வென்றவனும் தமிழன்; தோற்றவனும் தமிழன். இவ்வெற்றியை என்னவென்று பாராட்டுவது? இவ்வெற்றியால் புகழடைந்ததாகக் கருதிய மன்னரும் நம் இரக்கத்திற்கு உரியர். புகழுக்குரிய ஒரு செயலைச் செய்துவிட்டான் அம்மன்னன் என்று கருதி அவன்மேல் பாடாண்திணைப் பாடல்கள் பாடிய புலவர்களும் நம் இரக்கத்திற்கு உரியவரேயாவர்.

இவ்வெற்றிகளால் பெறுவது இன்பமாயினும், புகழாயினும் அவை விரும்பத்தக்கனவல்ல. இவ்வுண்மையை தமிழர் நன்கு அறிந்திருந்துங்கூடப் போரால், வெற்றியால் இன்பங்காண முயன்றனர். அதனால் பெற்ற புகழையும், அப்புகழ் நிலையற்றதாயினும், விரும்பினார்கள். போர் செய்தலாகிய முறையை மேற்கொண்டு புகழடைய முயன்ற இவர்களினும் வேறுபட்ட முறையைக் கையாண்டு புகழீட்டியவர்களும் உண்டு. பிறருக்குத் தீங்கு புரிவதைக் கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்த அவ்வள்ளல்களும் புகழ் பெற்றனர். அறிவின் துணைகொண்டு புகழ் தேட முயன்ற இப்போர் வெறியர்கள் எங்கே, உணர்வின் துணைகொண்டு கொடை என்ற சிறப்பால் புகழ் படைத்த வள்ளல்கள் எங்கே! இவ்விரு சாராரும் பெற்றது ஒரே புகழ்தான் என்றாலும், இருவர் கையாண்ட வழிகள் எவ்வளவு மாறானவை! அடையும் பயன் ஒன்றேயாயினும், மேற்கொள்ளும் வழி வேறுபாட்டால் இருவரும் இரு வேறு துருவங்கட்குச் சென்றுவிட்டனர்.