பக்கம்:அகமும் புறமும்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 325

நினைவு ஓடியிருப்பினும் வியப்படைவதற்கு ஒன்று இல்லை: “இது நாம் வளர்க்கும் கொடியன்று. காட்டில் இயற்கையாய் இந்த ஒரு கொடிதானா வளர்கிறது? எத்தனையோ ஆயிரக்கணக்கான கொடிகள் உள. முல்லை மட்டும் என்ன? எத்தனையோ கொடிகள்! இவற்றிற்கெல்லாம் கொழு கொம்பு தேவையா என்று காண்பதுதானா நமது வேலை: அரசனாய் இருக்கும் நமக்கு எத்தனை தொல்லைகள்! முறை வேண்டியும் குறை இரந்தும் நம்மிடம் வருபவர்கட்கே தக்க வழிதேட முடியாத பொழுது இந்தக் கொடிக்காகக் கவலைப்படுவது அறிவீன மன்றோ? கிடக்கட்டும். இன்று நாம் இந்தக் கொடிக்கு ஒரு கொம்பு நட்டுவிட்டால் நாளை வரும் கொடிகளையெல்லாம் யார் காப்பாற்றப் போகிறார்கள்? அப்படியே இத்தக் கொடி அழிந்துவிட்டால்தான் என்ன? உலகமா முழுகி விடும்? செலுத்துத் தேரை மேலே!” இவ்வாறு நினைக்க அறிவுவாதிக்கே முடியும். ஆனால், பாரி அறிவுவாதி அல்லனே!

பாரியின் மனநிலை

பாரி செய்தது யாது? தான் ஓர் அரசன் என்பதையும் எதிரே இருப்பது கேவலம் ஒரு கொடிதான் என்பதையும் அறவே மறந்துவிட்டான். அந்தப் பண்பட்ட உள்ளத்தில், கலை மனத்தில், உலகிலுள்ள உயிரெல்லாம் ஒன்று என்று கருதும் கருணை உள்ளத்தில், எதிரே முல்லைக் கொடி தெரியவேயில்லை. பின்னர் என்ன தெரிந்தது? கொழு கொம்பின்றி வாடும் ஓர் உயிர்தான் தெரிந்தது. பாரியின் உயிரே ஊசலாடிவிட்டது. கொடி கொம்பில்லாமல் ஆடினதைக் கண்ட கருணை மறவனின் உள்ளம் துடித்தது; உயிர் துடித்தது. ஓர்உயிர் மற்றோர் உயிரின் வாட்டத்தைக் கண்டுவிட்டது. தன்னுடைய இனமாகிய மற்றோர் உயிர் வருந்துவதைக் கண்டுவிட்டது. “வாடிய பயிரைக் கண்ட