பக்கம்:அகமும் புறமும்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அமைச்சன்

இத்தாலியனுடைய நூல்

இற்றைக்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் இத்தாலித் தேசத்தைச் சேர்ந்த ‘மெக்காவிலி’ என்ற பெருஞ்செல்வன் அரசன் (The Prince) என்ற பெயரால் ஒரு நூலை எழுதினான். அரசனுக்குரிய இலக்கணம், ஆட்சி முறை என்பன அந்நூலில் ஓரளவு கூறப்பெற்றுள்ளது உண்மையே. ஆனால், அதைவிட மிகுதியாக, எத்தகைய சூழ்ச்சிகளிழைத்தால் ஒருவன் அரசனாக முடியும் என்பதையே அந்நூல் பேசிற்று. மிக சமீப காலம்வரை அந்நூல் ஈடு இணையற்றதாய் ஐரோப்பா தேசம் முழுவதிலும் விளங்கி வந்தது.

குறளும் கூறுகிறது

ஆனால், மெக்காவிலி தோன்றுதற்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே இத்தமிழ்நாட்டில் ஒப்பற்ற அரசியல் நூல்கள் தோன்றின. அத்தகைய நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்று கூறத் தேவை அன்று. திருக்குறள் அல்லாத ஏனைய தமிழ் நூல்களிலும் அரசியல் பற்றிய பல கருத்துக்கள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. அரசியல் கருத்துக்களை அறிவிப்பது அவற்றின் தலையாய நோக்கம் அன்றாகலின், இலை மறை காயாய் இவ்வுண்மைகள் அப்பாடல்களில் அமைந்துள்ளன.

அரசாட்சியில் அரசனுக்கு அடுத்தபடியில் நிற்பவன் அமைச்சனேயாவன். மிகு பழங்காலத்தில், அரசன் உலகின் உயிர் என்று கருதப்பெற்ற காலத்திற்கூட,