பக்கம்:அகமும் புறமும்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அமைச்சன் • 331


அடை மொழிகள்

இத்தாலிய நாட்டு அரசியல் ஞானி கூறின இவற்றைக் காட்டிலும் சிறந்த பல உண்மைகளைத் தமிழர் இராண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கண்டுள்ள முறையச் சற்று விரிவாகக் காணலாம். அமைச்சரையும் அவரது தொழிலையும் எத்துணைச் சிறப்பாகத் தமிழர் கருதினர் என்பதை இவ்வமைச்சரைக் குறிப்பிடும்பொழுது கொடுத்த அடைமொழிகளாலேயே ஒருவாறு அறியலாம்.


‘நூல் அறிபுலவர்’ (சிலம்பு, 25,116)
‘நுணங்கு பொருள் அமைச்சர்’ (பெருங்கதை 650)
‘நுண்மதி யமைச்சர்’ (பெருங்கதை 302)
‘நுண்வினை அமைச்சர்’ (பெருங்கதை 415)
‘தெரிமதி யமைச்சர்’ (பெருங்கதை 422)
‘நூல் வல்லாளர்’ (பெருங்கதை 469)

என்ற அமைச்சரைப்பற்றி நூல்கள் நுவல்கின்றன.

பண்புகள்

இவ்வடைமொழிகளிலிருந்து அறியப்படுவது ஒன்று உண்டு. பல்வகை மக்களொடும் பழகவேண்டிய கட்டுப்பாடுடைய அமைச்சன், கூரிய அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும். ஒருவர் பேசும் பேச்சுக்களிலிருந்து மட்டும் அவருடைய மனநிலையை அறிதலென்பது இயலாத காரியம். ‘மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே’ என்ற முதுமொழியையும் அதன் எதிர் மொழியையும் அமைச்சன் கவனத்திற் கொள்ள வேண்டும். பேசுவோர் சொற்களை மட்டும் கொண்டு முடிவு செய்யாமல், அவர் முகக் குறிப்பு முதலியவற்றைக்