பக்கம்:அகமும் புறமும்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336 • அகமும் புறமும்

சொல்லால் இவற்றைக் குறித்துவிடலாம். இக்கருத்தை மனத்துட்கொண்டே பொதுமறையாசிரியர்,

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

(குறள்–68)

என்று கூறுகிறார். இக்குறளில் தூது என்ற பெயர் தரப்படினும், அது அமைச்சரையே குறிக்கும் என்பதைச் சந்தருப்பத்தாலும் பரிமேலழகர் உரையாலுங் காணலாம்.

பழிக்கு நாணல்

இரண்டாம் முறையில் நல்லவனாய் இருத்தல் பழி நாணும் பண்புடைமையால் ஏற்படுதாகும். தாம் செய்யும் தவறு பற்றி வரும் பழிக்கு அஞ்சி நடத்தல் என்பது அனைவருக்கும் இயலுவதொன்றன்று. இயல்பாகவே சில மனங்கள் பழியைக் கண்டு நடுங்கும். இத்தகையவர்களைப் பற்றிக் கூற வந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று,

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்

(புறம்–182)

என்று கூறுகிறது பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்றுவிடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யாவிடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த வழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

 பிறர் பழியும் தம்பழிபோல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு

(குறள்–1015)

எனவே, அரசனே பழிக்குரியவற்றைச் செய்யினும் அரசன் செயலாதலின் தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்ததுபோலக் கருதி நாணமடையும் பண்பாடே பழியஞ்சி நடத்தலில் தலையாயவன் செய்வது. இதை மனத்துட்கொண்டே பெருங்கதை,