பக்கம்:அகமும் புறமும்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338 • அகமும் புறமும்


ஆயும் அமைச்சர்

இவ்வைந்து அடிகளில் அமைச்சருக்குக் கூறிய இலக்கணமும் பண்பாடும் மெக்காவிலி போன்றவர்களால் இரண்டு அச்சுப் பக்கங்களிற்கூடக் கூறப்படவில்லை. ’நன்றும் தீதும் கண்டு’ என்ற சொற்களால் அமைச்சரின் அறிவுத்திறம் பேசப்படுகிறது. மேலும் ‘கண்டு’ என்று மட்டும் கூறி நிறுத்திவிடாமல், ‘ஆய்ந்து’ என்றுங் கூறப்பெற்றதால், நுண்மாண் நுழைபுலமும் பேசப்படுகிறது. நடைபெறுகின்ற நிகழ்ச்சியை அப்படியே பொருள் செய்வதானால், உண்மை காண்டல் இயலாது. தீயது போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் நலமாகவும், நலம் போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் தீமையாகவும் இருக்கலாமன்றோ? எனவே புறத் தோற்றத்தையும் நிகழ்ச்சியையும் கண்டு அவற்றின் பயனைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், தன் நுண்ணிய அறிவால் நிகழ்ச்சியின் அப்பாலுள்ள பொருளை அறிதல் வேண்டும். இதனை ஆசிரியர் ‘ஆய்ந்து’ என்ற சொல்லல் கூறிவிட்டார்.

இருவகைத் தீமை

நலம் கண்டவிடத்து அதனிடத்து அன்பும், தீமை கண்டவிடத்து வெறுப்பும் கொள்வானேயாகில் அது அமைச்சனுக்கு ஏலாது. எனவே, அன்பையும் அறத்தையும் ஒருசேரக் கூறினார் ஆசிரியர். ‘இக்காலத் தீமை, நிலை பெற்ற தீமை’ எனத் தீமை இருவகைப்படும். நிலைபெற்ற தீமையைத் தடுக்க இக்காலத் தீமை பயன்படும்; உயிரை மாய்க்கும் கழலையை அறுத்துவிடுதல்போல; அமைச்சனாவான் இவை இரண்டின் தராதரத்தையும் ஆய்ந்து தீமையைத் தடுக்கும் இடத்திலும் அன்பிலிருந்தும் அறத்திலிருந்தும் வழுவாமல் காத்தல் வேண்டும். மேலும் அன்புள்ள-