பக்கம்:அகமும் புறமும்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழர் கண்ட உண்மைகள்

விடை காணா வினா

ம்முள் எத்தனை பேர் ‘வாழ்க்கை’ என்றால் என்ன? என்னும் வினாவிற்குச் சரியான விடைகூற முடியும்? நாம் நமது விருப்பம் இருந்தோ இல்லாமலோ பிறந்துவிட்டோம்; விருப்பம் இல்லாமலிருந்தும் இறக்கத்தான் போகிறோம். இடை நடுவே இவ்வுலகில் தங்கி இருப்பதே வாழ்க்கை என்ற கருத்துடன் பலரும் அமைந்துவிடுகிறோம். இதற்கு முன்னர் வாழ்க்கை இருந்ததுண்டா? இனி வாழ்க்கை இருக்கப்போகிறதா? இவ்வினாக்களைக் கேட்டும் பயன் இல்லை. காரணம் இவற்றிற்கு விடையை நாம் அறிதல் இயலாது, என்றாலும், ‘இடையில் உள்ள இவ்வாழ்க்கையின் உட்கருத்தென்ன?’ என்று ஆய்வது நமது கடமையாகும்.

மாந்தர் பல வகையினர்

மிகப் பெரியவரான தாயுமான அடிகள், நம் போன்றவர்கள் வாழ்க்கையை அலசிப் பார்த்து ஒரு முடிவு கூறுகிறார். ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற அவருடைய சொற்கள் நம்முள் பெரும்பாலோர் வாழ்க்கையில் நடைபெறுவதொன்றாகும். ஆனாலும், இதிலும் ஒரு சிறப்புளது. நம்முள் எத்தனை பேர் பசிதீர உண்பவர்கள்? பசிக்காக உண்பவர்கள் மிகப் பெரியவர்களும், யோகிகளும், மிக வறியவர்களுமேயாவார்கள். ஏனையோர் உண்பது பசிக்காக அன்று. உருசிக்காகவே. உண்பதற்காகவே உயிர்வாழ