பக்கம்:அகமும் புறமும்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 349

தோன்றுவதே இல்லை. இங்ஙனம் கூறினவுடன் எல்லோரும் வேதாந்த விசாரணையில் இறங்கவேண்டும் என்று கூறுவதாக நினைத்துவிட வேண்டா. இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, ஒருவாறு இவற்றிற்கு விடையுங்கண்டவர்களே பெரியோர்களாய்த் திகழ்ந்தமையை அறிகிறோம். எனவே, இவ்வினாக்கள் வாழும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை என்பது பெறப்படும்.

மேலே கூறிய வினாக்களின் விடைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்பது தெற்றென விளங்கும். ஒருவன் மனித உடலோடு பிறந்துவிட்டால் மட்டும், மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆகிவிட முடியாது. தனித்தனி மக்கள் தனித்தனியான குறிக்கோள்களைக் கொண்டு இலங்குவதைக் காண்கிறோம். இனி இக்குறிக்கோள்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்றால், வேண்டா என்று கூறிவிடலாம். தனித்தனி மனிதர் தத்தம் வாழ்க்கையின் நிலைமைக்கு ஏற்பக் குறிக்கோளைப் பெற்றிருக்கலாம். குறிக்கோள் இல்லையாயின், வாழ்க்கை சுவையற்றதாகிவிடும்.

கண்டதே கண்டும், உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும் வாழும் இவ்வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுதல் இயல்பு. ஒரு சிலர் ‘பொழுதே போவதில்லை!’ என்று குறை கூறுவதையும் கேட்கிறோம்.

நாள் என ஒன்றுபோற்காட்டி, உயிர் ஈரும்
வாள்அஃது உணர்வார்ப் பெறின்

(குறள்–334)

என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறி இருப்பவும், பொழுது போவதில்லை என்று கூறும் இவ்வகை மனிதர்களை என்னென்று கூறுவது! இவர்கள் வாழ்க்கையை