பக்கம்:அகமும் புறமும்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354 • அகமும் புறமும்

அவர்கள் கொண்ட குறிக்கோளை அடையாமற்போயினும் அக்குறிக்கோள் மிக உயர்ந்ததாய் இருந்தது என்பதில் ஐயமில்லை. அவர்கள் பெற்ற உயர்வையும் அவர்கள் கொண்ட வெற்றியையும் கொண்டு கணக்கிடாமல், குறிக்கோளையும் அதற்குச் செய்யப்பெற்ற முயற்சியையும் கொண்டே தமிழர் கணக்கிட்டனர். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகையார்,

வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.
(குறள்–595)

என்று முழக்கினார். மனிதனின் உயர்வு அவன் உள்ளத்துட்கொண்ட குறிக்கோள் அளவாகுமே தவிர, அதனை அவன் அடைந்தானா இல்லையா என்பதைப் பொறுத்ததன்று.

உலகம் ஏன் நிலைபெறுகிறது?

இவ்வுலகம் ஏன் நிலை பெற்றிருக்கிறது? எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது? இவ்வினாக்கட்குப் பலர் பலவாறு விடை கூறுவர். விஞ்ஞானிகள் பெருவெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கோளங்கள் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு நிற்றலின், அந்த ஈர்ப்புச் சக்திக்குக் கட்டுப்பட்டே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது என்பார்கள். எவ்வாறு என்ற வினாவிற்கு, உலகம் தன்னில்தானே சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருத்தலினால் என்றும் விடை கூறுவர். இறைவனை நம்பியிருக்கும் அன்பர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பது இறைவனுடைய கருணையால் என்பர். எதனையுமே நம்புவதில்லை என்ற கொள்கையுடையார் சிலர், ‘இத்தகைய வினாக்களுக்கு நாம் ஏன் விடை தேடி அலையவேண்டும்? உலகந்தான் இருக்கிறது. அது எதனால் நிலை பெற்றால் என்ன?’ என்பர். பழைய புராணம் முதலியவற்றை