பக்கம்:அகமும் புறமும்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356 • அகமும் புறமும்

வல்லுநர் கூறுகின்றனர். ஆதியில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதர் பல நூறு ஆண்டுகளின் பின்னர்க் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டனர். தனித்தனியாய் வாழ்ந்து வந்த பொழுது அவர் அநுபவித்துப் பழகிய உரிமைகள் முதலியன, கூட்டமாக வாழும்பொழுது பயன்படவில்லை. தனி மனிதனுடைய உரிமைகள் பலவற்றைக் கூட்டத்துடன் வாழும்பொழுது விட்டுக் கொடுக்க வேண்டி நேரிட்டது. காலம் செல்லச் செல்ல இப்புதுமுறை வாழ்க்கையைப் பழகிக் கொண்டான் மனிதன். அதிகக் கூட்டம் கூடி ஒரிடத்தில் வாழத் தலைப்பட்ட இடம் நகரம் எனப் பெயர் பெறலாயிற்று. கிராமங்களில் வாழும் மக்கள் ஓரளவு பிறருடைய கையை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்த முடிந்தது. ஆனால், நகரத்தில் வாழ்க்கை நடத்துபவர் பல்வேறு துறைகளில் முயற்சி செய்யத் தொடங்கினர்; ஆதலின் பிறர் கையை எதிர்பார்த்தே அன்றாட வாழ்க்கை நடத்தும் நிலைக்கு வந்தனர். பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலையில், அப்பிறருக்காகத் தம்முடைய உரிமைகள் சிலவற்றை விட்டுவிட வேண்டிய நிலைமையும் வருமன்றோ? இவ்வாறு விட்டுக் கொடுத்து வாழ்வதே நகர வாழ்க்கையின் அடிப்படையாகும். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கை ‘நாகரிக வாழ்க்கை’ என்று பெயர் பெறலாயிற்று. ‘நகரம் என்ற சொல்லிலிருந்தே ‘நாகரிகம்’ என்ற சொல் பிறந்தது. நாளாவட்டத்தில் தன் நலத்தைக் குறைத்துக் கொண்டு பிறர் நலம் பேணும் வாழ்வையே ’நாகரிக வாழ்வு‘ என்று கூறத் தலைப்பட்டனர். இத்தகைய பண்பாடுடையவர்களை ‘நாகரிகர்’ என்றும், ‘நாகரிகம் அறிந்தவர்’ என்றுங்கூடக் கூறினர்.