பக்கம்:அகமும் புறமும்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 363

அறியாது (எய்யாது) எம்முடைய சிறிய செம்மையான நாக்கு]

புலவருடைய நா ஏனையோருடைய நாவைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்றார் வன்பரணர். ஆனால், தாமும் ஒரு புலவராதலின் புலவர்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும் பொழுதும் தற்புகழ்ச்சி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகச் ‘சிறு’ என்ற அடைமொழி தந்து ‘சிறு நா’ என்று மிக்க அடக்கத்துடன் கூறிக்கொள்கிறார். வன்பரணர் போன்ற பெரும் புலவர்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதானால், அத்தகைய புலவர்கள் வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது!

தாழ்ந்தது எது?

இத்துணைச் சிறப்புடைய புலவர்கள் தங்களுடைய இனத்தவர் எதனை உயர்ந்தது என்றும், எதனைத் தாழ்ந்தது என்றும் கருதினார்கள் என்பதைக் கூறினால் அது அந்த இனத்தார் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இன்று வாழும் நாம் மிகவும் தாழ்ந்தது என்று எதனைக் கருதுகிறோம்? பலரும் பலவாறு நினைப்பதற்கு ஏற்ற வினாவாகும் இது. ஆனால், நாம் எதை இழிந்தது என்று நினைத்தாலும், ஒன்றை மட்டும் நினைக்கமாட்டோம் என்பது உறுதி. பிறரிடம் ஒன்றைத் தா என்று கேட்டல் இழிவு என்று கூறினால் நம்மில் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவோம். காரணம், இன்று நம்முடைய அன்றாட வாழ்வில் பலருடைய கையை எதிர்பார்த்தே வாழ வேண்டியுள்ளது. நம்மால் எதிர்பார்க்கப்படும் அப்பலருள் சிலர், தாமே நாம் வேண்டியவற்றைத் தருவர்; இன்னுஞ் சிலர், நாம் கேட்ட காலத்தும் கொடுக்க மறுப்பர்.