பக்கம்:அகமும் புறமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 • அகமும் புறமும்

கிறது. தொடர்புடையாரிடம் மட்டுஞ் செல்வதை அன்பு என்றும், தொடர்பில்லாதாரிடத்துஞ் செல்வதை அருள் என்றுங் கூறுவர். இல்லறத்தால், அகவாழ்வால் கிடைக்கும் இவ்வருட் பெருக்கத்தைப் பொது மறையாசிரியர்,

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
                                                                

(குறள்–757)

என்று குறிக்கிறார்.

மனிதன் முழு வாழ்வு பெறும்பொழுது அருள் அவனிடம் முழுவதும் நிறைந்து விடுகிறது. அகவாழ்வு வாழாமலும் ஒரு சில பெரியவர்கள் அருள் வாழ்வைப் பெறுவதுண்டு. இத்தகையார் விதிவிலக்கேயாவர். இவர்களைக் கொண்டு அனைவருக்கும் இது இயலுமென்று நினைத்துவிட வேண்டா. அகவாழ்வு மனிதனை முழு வாழ்வு வாழப் பழக்குகிறது என்பது பொதுச் சட்டம். சட்டத்திற்கு விதி விலக்காகச் சிலர் அமைந்துவிடுவதால், சட்டம் பொய் என்று ஆகி விடுவதில்லை. அவ்விதி விலக்கே சட்டத்தை நிலைநாட்டப் போதிய சான்றாகும்.

இதுகாறும் அகத்திணை வாழ்வின் அடிப்படைத் தத்துவம் யாதென்பதைக் கண்டோம். இத்துணைச் சிறந்த தத்துவங்களையும் மனத்துட் கொண்டு திருவள்ளுவர் தம்முடைய ஒப்பற்ற திருக்குறளில் அகவாழ்வு பற்றி விரித்துப் பேசுகிறார். அதனையும் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். நீதிநூல் ஆகலின், குறள் சிறந்த இல்லறம் அமையவேண்டிய அடிப்படைத் தேவைகளையும், அத்தேவைகள் நிரம்ப ஏற்ற வழிகளையும் மட்டும் கூறிச் செல்கிறது. இலக்கியங்களிற் காணப்படுவதுபோல, தலைவர் தலைவியருடைய வாழ்வு எங்ஙனம் அமைய வேண்டும் என்பதைக் குறள் விரித்துக் கூறுவதைக் காணலாம்.