பக்கம்:அகமும் புறமும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு

மருதத்திணை வளர்ச்சி

மனிதன் ஆதியில் பச்சை இறைச்சியைத் தின்று பல காலம் வாழ்ந்தான்; அதன் பின்னர்ப் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துச் சில விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு வேலை செய்ய அவற்றைப் பயன்படுத்தினான். இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்துத்தான் ‘குடும்பம்’ என்ற ஒன்றை வைத்து நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கினான். இக் குடும்ப வாழ்க்கையிலேதான் தமிழ் இலக்கணங்கூறும் ‘மருதத்தினை’ தோன்றலாயிற்று. மருதத்திணையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வழி வகுத்துக் கொண்டன. இப்பொழுதுதான் மனிதனுடைய சமுதாய வாழ்க்கை (Social lite) தொடங்கிற்று. இத்தகைய வாழ்க்கையில் பல அல்லல்களும் உடன் தோன்றின. நன்மையும் தீமையுங் கலந்துதானே உலகம் வாழ்கிறது! இதுவரை ஒருவரைப் பற்றியுங் கவலை கொள்ளாமல் தன் நலன் ஒன்றையே கருதி வாழ்ந்த மனிதனுக்கு, இப்பொழுது புதிய அனுபவங்கள் தோன்றலாயின. இவற்றில் ஓரளவு மகிழ்ச்சியும் ஓரளவு வெறுப்புங் காணலாயினான் மருதநில மனிதன், தன்னுடன் வாழ்வை நடத்த வந்துள்ள ஒரு பெண்ணின் நலந்தீங்குகளில் தானும் பங்கு கொள்ளத் தொடங்கியதே அவனது புதிய அனுபவம். மேலும், வீட்டினுள் தங்கியிருக்கும் அவளுக்கும் சேர்த்து உண்வு தேடவேண்டிய பொறுப்பும் அவனதாயிற்று. நாளாவட்டத்தில் அவர்கள் வாழ்வின் பயனாகத்