பக்கம்:அகமும் புறமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 • அகமும் புறமும்

தோன்றியுள்ள புது உயிர்கட்கும் உணவு சேகரிக்க வேண்டிய கடமை அவன தாயிற்று. இக் கடமைகளில் ஓரளவு மகிழ்ச்சி இருந்ததை அம் மனிதன் உணராமற் போகவில்லை. இம் மகிழ்ச்சியே உலகிடை மனிதன் சமுதாய வாழ்க்கை வாழ வழி செய்தது. தனிக் குடும்பங்கள் பல ஓரிடத்தில் தங்கி வாழ வேண்டுமாயின், ஒவ்வொருவரும் தம் உரிமையைச் சிறிது இழக்கத்தான் வேண்டும். சுதந்தரத்துடன் வாழ்ந்து பழகிய மனிதனுக்குத் தன் விருப்பம் போலச் செயல் செய்யும் உரிமை, சிறிது குறைந்தாலும் அதிக மனக் கசப்புத் தோன்றத்தானே செய்யும்? அவ்வித நிலைமையிலிருந்து அவன், விடுபட ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழிதான் ஊர் முழுவதையும் ஒரு குடும்பமாக நினைத்து வாழும் முறை. இவ்வித வாழ்க்கை முதலில் வருத்தத்தைத் தரும் ஒன்றாயினும், நாளடைவில் ஓர் இன்பத்தையும் தரலாயிற்று. பிறர்க்கென வர்ழும் வாழ்க்கையில் ஒப்பற்ற இன்பம் இருத்தலை உணரத் தலைப்பட்ட அன்றுதான் மனிதன் விலங்கிலிருந்து வேறு பிரிந்து வாழ்ந்தான் என்று கூற வேண்டும்.

இரு வகை அறம்

மேற்கூறிய முறையில் ஒரு சமுதாயம் அமைய வேண்டும். ஆனால், சுலபமாகக் கூறிவிட்டோமே தவிர, வாழ்க்கையில் இந்நிலை அமையப் பலகாலம் செல்லும், இத்தகைய சமுதாயத்தை அமைக்கவே குறள் அடிகோலிற்று. உலகிடைப் பிறந்த ஒவ்வொருவனும் வாழ உரிமை பெற்றவன்தான். அவ்வாழ்க்கை எத்தகையதாக அமைதல் வேண்டும்? இல்வாழ்க்கை என்று கூறப்பெறும் இருவர் கூடி வாழும் வாழ்க்கையும், துறவறம் என்று ஒருவனே வாழும் வாழ்க்கையும் உலகிடை உண்டு. இவ்விரு வகையினுள் எதனைக் குறள் போற்றிக் கூறிற்று?