பக்கம்:அகமும் புறமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37 • அகமும் புறமும்

வியாபாரம். ஆனால், வாணிகங்கூட இருவர் சேர்ந்து நடத்துவதானால், ஓரளவு ஒத்து நடக்கும்; அன்பு இல்லையேல் முறியும். அங்ஙனம் இருக்கக் குடும்பம் எவ்வாறு நடைபெறும்.

எத்தகைய மனைவி?

வள்ளுவர் இல்வாழ்க்கை இன்றியமையாதது என்று கூறிவிட்டமையின் இல்வாழ்வில் ஒருவன் ஈடுபடத் தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். எப்படிப்பட்ட மனைவி இருந்தால் இல்வாழ்வு நன்கு நடைபெறும் என்பதை ஆராய வேண்டாவா? ஆராயாது ஒரு செயலைச் செய்தல் பேராபத்தில் அன்றோ கொண்டு விடும் நட்புச் செய்தலைக்கூட ஆராயாமல் செய்தல் ஆகாது என்கிறார் ஆசிரியர். வேண்டாவிட்டால் விட்டு விட்டு ஓடிவிடக்கூடிய நட்பிற்கே ‘நாடாது நட்டலிற் கேடு இல்லை’, என்றால், விட்டு ஓட முடியாத இல்வாழ்விற் புகுவான் எவ்வளவு ஆராய வேண்டும்? ஆகவே, ‘எத்தகைய மனைவி வேண்டும்?’ என்ற வினாவிற்கு அவரையே விடைகேட்டல் நலம் தரும், ‘மனைத்தக்க மாண்புடையாளாகி’ அவள் இருத்தல் வேண்டும் என்கிறார். மனை வாழ்க்கைக்கு ஏற்ற மாண்புகள் பலவற்றுள்ளுஞ் சிறந்தது ‘கற்பு’ என்ற ஒன்றன்றோ? கற்பு என்பது என்ன? விடை விரியு மாயினும், சுருங்கக் கூற வேண்டுமாயின், ஒரு குறளே போதுமானது.

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
                                                             (குறள் – 66)

என்பதே கற்பின் விரிவுரை. இவை அனைத்துஞ் செய்யக் கூடியவளே பெண் என்றால், இத்தகைய பெண்ணே இல்வாழ்விற்கு உகந்தவள் என்பது கூறவும் வேண்டுமோ?