பக்கம்:அகமும் புறமும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 41


பெண்ணின் புற இயல்புகள்

இவ்வளவு சிறப்பும் அமைந்திருப்பினும், அப் பெண் வேறு ஓர் இயல்பும் உடையளாய் இருத்தல் வேண்டும் அதுவே குடும்பம் நடத்தும் முறை. இதனைச் சுருக்கமாகத் ‘தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’, என்று குறள் கூறுகிறது. ‘வளத்தக்காள்’ என்பதற்குக் கணவன் வருவாய்க்கேற்ப வாழ்வு நடத்துபவள் என்பதே பொருள். எவளோ ஒரு பெண்ணை எவனோ ஓர் ஆண்மகன் மணந்துகொண்டு வாழ்தல்தான் இல்வாழ்க்கை என்ற எண்ணம் நம்மில் பலர் உள்ளத்தில் தோன்றியிருக்கிறது. ஆனால், வள்ளுவர் வகுத்த வாழ்க்கை முறையில் காட்சி தரும் பெண், மேற் கூறிய இலக்கணம் அமைந்தவளாக இருத்தல் வேண்டும். இத்தகைய பெண் கிடைத்து வாழ்வு நடத்துகையில் வேறு எது இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றத்தானே செய்யும்! இங்ஙனம் குறளாசிரியர் மனத்திலும் தோன்றியிருக்கும் போலும்! அதனாலேயே அவர்,

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை(குறள்-63)

என்று வினவுகிறார். இதே கருத்துப் பிற்காலத்திலும் பேசப்படுகிறது. ‘இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை,' என்பது போன்ற உரைகள் இக் கருத்தை வலியுறுத்தல் காண்க. இதே கருத்தை மேனாட்டுக் கவிஞரான ‘போப்பு’ என்பவர்,

‘All other goods by fortune's hands are given
A wife is the peculiar gift of heaven.'

என்று கூறுதல் காண்க. பழைய விவிலிய வேத நூலும் ‘A Virtuous woman is a crown to her husband.’ என்றே கூறுகிறது.