பக்கம்:அகமும் புறமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 • அகமும் புறமும்


நுண்ணிய கருத்து

இத்துணைச் சிறந்த மனைவியை ஒருவன் பெற்றுக் குடும்பம் நடத்தத் தொடங்கியவுடன் இல்லறம் என்னும் நல்லறம் நன்கு நடைபெற்றுவிடும் என்று கூறிவிட முடியுமா? இவ்வறத்தின் அடிப்படை அறியப்படாவிடின் வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நடைபெறுமா? பின்னர் அடிப்படை எங்கே உளது? மனிதன் குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும் சிறப்படைய வேண்டுமாயின், அதற்கு அற அடிப்படை தெரிந்து இருத்தல் வேண்டும். அந்த அடிப்படையைக் குறள் ‘அறன் வலியுறுத்தல்’ என்ற அதிகாரத்திலேயே சொல்லிச் செல்கிறது.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
                                                                   (குறள்–34)

என்ற குறளே அடிப்படை. இதனைக் கூறாதார் இல்லை. ஆனால், இவ்வடிப்படையில் வாழ்வாரைக் கண்டாலே அருமையினும் அருமை! அறம் என்று கூறினவுடன் அஞ்சிவிட வேண்டா; மனம் தூய்மையாக இருத்தலே அறம் என்று கூறுகிறது. இக் குறள். இதைவிட எளிமையாக அதைப்பற்றிக் கூறல் இயலாது. ‘தருமத்தைச் செய்,’ என்று கூறும் வாழ்க்கை முறையைக் காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பது கூறவும் வேண்டுமோ?

குடும்பப் பரீட்சை

மனத்துக்கண் குற்றம் இல்லாது இருக்க வேண்டிய கூறுபாடு ஆண் பெண் என்ற இருபாலாருக்குந் தானே கூறப் பெற்றது? எனவே, மனத் தூய்மை உடைய இருவர் இல்லறம் நடத்துதலே அறத்தின் அடிப்படையை அறிந்து வாழ்வதாகும். இங்ஙனம் வாழ்வு நடத்துபவர்கள் அறம் உணர்ந்தவர்களா என்பதை எவ்வாறு அறிவது? பிறர் அறிவது ஒரு புறம் இருக்கட்டும். வாழ்வு நடத்தும்