பக்கம்:அகமும் புறமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 47


எத்தகைய குழந்தை?

குழந்தைச் செல்வம் வேண்டுவது என்று கூறினவுடன் எத்தகைய குழந்தை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? குழந்தைகள் என்ற பெயருடன் பேயும் பிசாசும் இருந்தால் அவ் இல்வாழ்வு சிறப்படையுமா? உறுதியாகச் சிறப்படையாது. எனவே, மக்கள் எத்தகையவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை ஆசிரியர் குறிப்பாகப் பெற வைக்கிறார்;

அறிவு அறிந்த மக்கள், (குறள் 61)
பழி பிறங்காப் பண்புடை மக்கள் (குறள் 62)

என்று கூறுவதால் இத்தகைய மக்கட்பேறுதான் வேண்டத்தகுவது என்பதைப் பெற வைக்கிறார். ‘பிறந்த பிள்ளைகள் பிற்காலத்தில் நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ இருப்பதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அது அவர்களுடைய பொறுப்பே தவிர நம்மால் ஆவது ஒன்றும் இல்லை,’ என்று கூறுவார் உளராயின், அக்கூற்றை மறுக்கிறார் ஆசிரியர். பிள்ளைகள், பெற்றோர்க்கும் சமுதாயத்திற்கும் நன்முறையில் பயன்படுபவர்களாக இருக்குமாறு செய்தல் நமது கடமை. பயிற்சியால் இந்நற் பழக்கங்கள் அவர்கட்கு வருமாறு செய்வது ஒருபுறம். அடுத்து இயற்கையில் அமைந்துள்ள பண்புகளாயினவும் நற்பண்புகளாக அமைதல் வேண்டும். இவை இரண்டும் நன்கு அமைந்தால் ஒழிய ஒருவன் முழுவதும் நல்லவனாக இருத்தல் இயலாது.

இயற்கைப் பண்பு

இரண்டாவது கூறப்பெற்றதை முதலிற் காண்போம். குழந்தைக்கு இயற்கையாக அமையும் பண்புகள் நல்லனவாக இல்வழி, செயற்கையில் தரும் நற்பழக்கங்கள் சிறப்படையா. இயற்கையாக அமையும் பண்புகட்கு யார்