பக்கம்:அகமும் புறமும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 53

திருஞான சம்பந்தர் ஏன் சீர்காழியில் தோன்றினார்? அப்படியானால், இன்றைக்கு நாட்டில் உள்ள குறைபாடுகளைப் போக்க ஏன் ஒருவர் தோன்றக் கூடாது? என்றெல்லாம் பிதற்றும் பேதைகட்கு விடை கூறுவார் போலச் சேக்கிழார் பாடுகிறார். இதே குறிக்கோளுடன் தாயும் தந்தையும் இருந்ததனாலேதான் ஞான சம்பந்தர் அக்குடும்பத்தில் தோன்றினார். தாய் தந்தையர் தக்க மனத் திண்மையுடையவராயின், குழந்தையும் அவ்வாறே தோன்றும், ‘உரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி’ என்ற மாபெரு நூலை இயற்றிய பெரியாராகிய ‘கிப்பன்’ என்பார், வீழ்ச்சியின் காரணங்கள் பல கூறுகிறார். அவற்றுள் ஒன்று வருமாறு: ‘ரோமாபுரிப் பெண்கள்’ வீர வழிபாடு செய்து ஓயாது வீர்ர்களைப் பற்றியே தியானம் செய்து கொண்டிருந்த நாளில் நல்ல வீரர்கள் அவர்கள் வயிற்றில் தோன்றினார்கள். ஆனால், அவர்கள் அக்குறிக்கோளை மறந்து களியாட்ட வாழ்க்கை நடத்த ஆரம்பித்தவுடன் அவர்கள் வயிற்றில் கோழைகள் தோன்றலானார்கள், இக்கூற்றை நன்கு ஆராய்ந்தால், நாம் இது வரையிற் கூறியன எவ்வளவு உண்மை என்பது விளங்கும்.

உண்மை வெளிப்பாடு

கருத்தரிக்கும் காலத்தே மனிதனுடைய அகமனம் எவ்வாறு உளதோ, அவ்வாறே குழந்தை தோன்றும் என்பது எவ்வாறு எனக் காண்போம். போலி வாழ்வு வாழும் ஒருவன், ஒயாது விழித்திருந்து தன் சொற்கள் செய்கை என்ற இரண்டையும் காத்துக்கொள்கிறான்; இவை இரண்டினும் பிறரறியத் தவறு நேராமல் கவனித்துக் கொள்கிறான். ஆனால், உறக்கம், புணர்ச்சி, தடுக்கி விழும் நேரம், தும்மல் வந்த நேரம், எல்லையற்ற துக்கம் வந்த நேரம் ஆகிய இவற்றில் இப்போலி மனிதன் தான் வழக்கமாகக் கையாளும் விழிப்புத் தன்மையைக் கையாள இயலுவதில்லை. இந்நிலைகளில் இவன்