பக்கம்:அகமும் புறமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 • அகமும் புறமும்

மனத்தில் எந்த எண்ணம் குடிகொண்டிருக்குமோ, அதுவே வெளிப்படும். ஒரு மனிதன் உண்மைத் தன்மையை அறிய மேலே கூறிய நேரங்களே மிகவும் சிறந்தவைகள். கோபமே வராது தனக்கு என்று கூறிப் பிறர் காண்கையில் அவ்வாறே நடந்துகொள்ளும் ஒருவனை ஆழ்ந்த தூக்கத்தில் திடீரென்று எழுப்பினால், உண்மை விளங்கும். அவன் பழகாத நாய் போல எழுப்பியவரைப் பிடுங்கு தலைக் காணலாம். ஓயாது வேலும் மயிலுந்துணை, என்று கூறுபவன், தும்பியவுடன் 'ஐயோ!' என்று கூறுதலையும் உலகிடைக் காணலாம். அகமனம் தூய்மை பெற்ற பெரியோர்கள் மட்டுமே இந்நிலையிலுங்கூடத் தவறாமல் இருப்பர். இது கருதியே போலும்,

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது எந்நா;'
இடரினும் தளரினும் உன்கழல்
தொழுது எழுவேன்

(திருமுறை 4:1)

என்று ஞானசம்பந்தரும்,

வழுக்கி வீழினும் உன் திருப்பெயர் அல்லால்
மற்று நான் அறியேன் மறுமாற்றம்

(திருமுறை 54:1)

எனச் சுந்தரமூர்த்திகளும் அருளினர்!

அகமனம் துய்மை பெற்ற ஒருவனுக்குத்தான் கூடற் காலத்தும் மனம் தூய்மையாக இருக்கும். அப்பொழுது தோன்றும் பிள்ளைகளும் உயர்ந்த பண்பு உள்ளவர்களாய் இருப்பார்கள். இக்கருத்துடன்,


மனந்துயார்க்கு எச்சம் நன்றாகும்.
                                                          (குறள் 456)

தக்கார் தகவிலர் என்பது அவரவரர்
எச்சத்தாற் காணப் படும்
                                                             (குறள்-114)