பக்கம்:அகமும் புறமும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 55

என்ற குறள்கட்குப் பொருள் காண்டல் எவ்வளவு எளிதாய் உள்ளது? இக்கருத்தை மேலும் வலியுறுத்துவார் போன்று ஆசிரியர்,


நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
                                               (குறள்–958)


என்றுங் கூறுதல் காண்க, இவ்வாறு பொருள் கூறுவதால் இழுக்கின்மையும் அறிதல் வேண்டும். தக்கார் ஒருவருக்குப் பிள்ளை இல்லை எனில், அதனால் அவரைக் குறையுடையார் எனக் கூறல் வேண்டா. இவ்வாறன்றிப் பரிமேலழகர் 'தக்கார் தகவிலர்' என்ற குறளுக்குப் பொருள் கொள்வது போலக் கொண்டால் பல இடையூறுகள் வருதல் கண்கூடு. ஆசிரியர் பரிமேலழகர் இக்குறளுக்கு,'இவர் நடுவுநிலை உடையார், இவர் நடவு நிலை இலர் எனும் விசேடம் அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்,' என்று கூறுகிறார். இவ்வாறு கூறினால், மணஞ்செய்தும் பிள்ளைப் பேறில்லாத சந்தரமூர்த்தி சுவாமிகள், ஞானசம்பந்தர், பெரியாழ்வார், சாக்கிரட்டீஸ் போன்ற பெரியார்கள் நடுவு நிலையற்றவர்கள் என்று கூறவேண்டிய இடர்ப்பாடு வருதல் காண்க.

எனவே, நல்ல அறவாழ்க்கை உடைய ஒருவன் நடத்தும் இல்வாழ்க்கை செம்மையுடையதுதானா என்று காண வேண்டுமாயின், அவன் மக்களே தக்க உரைகல் என்ற ஆசிரியர் கூறுகிறார்.

பேருக்குப் பிள்ளை

வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறள் நன்கு சிந்திக்கற்பாலதாகும். வழக்கம் போலப் பின்னர் வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயாக