பக்கம்:அகமும் புறமும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 57


‘எழுபிறப்பும் தீயவை திண்டா; பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’
                                                                (குறள்-62)

வெண்பாவிற்கு அழகுசெய்யும் மோனையைக்கூடத் துறந்து விட்டு மக்கள் என்ற சொல்லுக்கு அடை வழங்குகிறார் ஆசிரியர். எத்தகைய மக்கள் வேண்டும்? அறிவு நிரம்பிய மக்களே வேண்டும். மனிதனை ஏனைய விலங்கு உலகினின்றும் பிரிப்பது அவன் பெற்றுள்ள அறிவு ஒன்றேயாகும். எனவே, அதன் இன்றியமையாமை அதிகம் வலியுறுத்தப்பட வேண்டுவதில்லை. என்றாலும் மக்களாய்ப் பிறந்தோர் பலர் இவ்வறிவு இல்லாதும், இருந்தும் பயன்படுத்தாதும் இருப்பக் காண்கிறோமாகலின், அறிவுடை மக்கள் வேண்டும் என்றார். எத்துணைச் சிறப்புடையதாயினும், இவ்வறிவு கூர்மையான வாள் போன்ற ஒன்றாகும். இதனைப் பெற்ற ஒருவன் தக்க பண்பில்லாதவனாயின், இவ்வறிவாகிய வாளைக்கொண்டு தனக்கும் பிறர்க்கும் தீங்கையே இழைப்பான். எனவே, அறிவு எனும் வாள் நன்கு பயன்பட வேண்டுமாயின், இதனினும் மேம்பட்ட ஒன்று கூடவே இருத்தல் வேண்டும். அதனை மனத்துட் கொண்ட ஆசிரியர் விடாது அதனை அடுத்த குறளில் கூறியுள்ளமை காண்க. சிறந்த அறிவாயினும், அது நன்முறையில் தனக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு செய்வது நற்பண்பே ஆகும். அப் பண்பு இல்வழி, அறிவு, நலன் விளைக்காததன்றித் தீமையே புரிதலுங்கூடும். இது கருதியே ஆசிரியர் அடுத்த குறளில் 'பண்புடை மக்கள்' வேண்டும் என்றார்.

பண்புடன் கலந்த அறிவு

அறிவின் செயலும் பண்பின்செயலும் பகுத்தறியப்பட வேண்டுவனவாகும். இன்றைக்குப் பலரும் அறிவுக்குத் தலைமை இடம் அளித்து வழிபடத்தொடங்கி உள்ளனர். அவர் கருத்துப்படி அறிவு ஒன்று மட்டும் உலகை ஆளத்-