பக்கம்:அகமும் புறமும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 61


சமுதாயத் தொண்டன்

இல்லறவியல் முழுவதும் இவ்விரண்டாம் வழியை வகுப்பதேயாகும். அதிலும், ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற அதிகாரத்தின் இவ்விரு குறள்களும் சமுதாயம் நன்கு நடைபெறவே வழிகாட்டுகின்றன. ஒருவன் எத்துணைச் சிறந்தவனாயினும், பிறர் வாழத் தன் வாழ்க்கையைச் செலுத்துபவனாய் இருப்பவனாயினும், அவன் எச்சமும் அவ்வாறு பயிற்றுவிக்கப்பட இல்லை எனில், பயனின்றாப் முடியும்.

பிள்ளைகட்கு இயற்கை, செயற்கை என இரு இயல்புகள் உண்டு என்பது முற்கூறப்பெற்றது. செயற்கை முறையால் அவர்களை நல்லவர் ஆக்கும் வழி,

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

(குறள் – 67)

என்ற குறளால் கூறப்படுகிறது. எனவே, இயற்கையாக அவர்மாட்டு அமையவேண்டுவன கூர்த்த அறிவும் சிறந்த மக்கட்பண்பும் ஆகும் என்பதை இங்குக் குறிப்பிட்டு விட்டார். இங்கனம் இயற்கையாகவே இவ்விரண்டும் அமைந்து செற்கையால் பெற வேண்டிய அவையத்து முந்தி இருக்கும் நிலையையும் பெற்று விட்டால், ஒருவன் பெறவேண்டிய பகுதி முழுவதும் பெற்றவனாவான். இத்தகைய மைந்தனைப் பெற்றவன் மகிழ்ச்சியடையக் கேட்பானேன்? அதிலும் அம்மகனைச் ‘சான்றோன்’ என்று பிறர் கூறக் கேட்ட தாய், ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் என்பதிலும் வியப்பு என்னை? குறைபாட்டை அறியத் தாய் மனப்பான்மையால் முடியாது ஆகலானும், குணமும் குற்றமும் நாடிக் குணம் மிக்க வழியே ‘சான்றோன்’ என்று பிறர் கூறுவர் ஆகலானும், அவர்கள் கூறியதைக் கேட்டபொழுது அவள் பெரிதும் உவக்கும் எனக்கூறினார் ஆசிரியர்.