பக்கம்:அகமும் புறமும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 63

ஐயமின்று. புத்ததேவன்கூட இவ்விதிக்கு விலக்கன்று. தாய் தந்தையரை அறிந்து கொள்ளும் நிலை வந்த பின்புகூட இந்நிலை முற்றிலும் மாறுவதில்லை. பிறருடைய நலந் தீங்குகளை ஆராயாமல் தன்னுடைய நலத்தைக் கவனிக்கவே அனைவரும் உளர் என்ற மன நிலையில் குழந்தை இருக்கக் காண்கிறோம் அல்லவா? சாதாரணமாகத் தானே விளையாடிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை, ஆனால், தன் தாயுடன் யாராவது ஒருவர் பேச வந்தவுடன் தாயின் கவனம் வேறு இடம் செல்வதைக் குழந்தை பொறுப்பதில்லை. அவள் கவனம் முற்றும் தன்பால் வரவேண்டும் என்ற எண்ணத்தால், இதுவரை சும்மா விளையாடிய குழந்தை, தாய் பிறருடன் பேச ஆரம்பித்தவுடன் அழத் தொடங்குகிறது. பேச்சை நிறுத்தித் தன்னைத் தாயானவள் துரக்கியவுடன் அழுகை நின்று விடுகிறது. ஆனால், சில வினாடிகளில் தாயின் மடியிலிருந்து இறங்கி விளையாட ஒடி விடுகிறது. இங்ங்னம் தொடங்கும் தன்னலம்’ எளிதில் நம்மை விட்டுப் போவதில்லை. தோழர்களுடன் சேர்ந்து விளையாடும் குழந்தை கையில் வைத்திருக்கும் ஒரு பொருளைக்கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். தன்பொருளைப் பிறரிடம் தர எளிதாக அக் குழந்தை உடன்படுவதில்லை.

பெரியோர் தன்னலம்

‘தன்னலம்’ என்று கூறினால் வெறுக்கத்தகுந்த சொல்லாய் அது விளங்குகிறது. ஆனால், நடைமுறையில் நடைபெறுவது அதுதான். குழந்தை தன் தின்பண்டத்தைத் தர மறுப்பதும், ஒரு நாட்டார் பிற நாட்டாருக்கு விடுதலை தர மறுப்பதும் இதே அடிப்படையில் தோன்றுவனவே. பாரசீக எண்ணெய்க் கிணறுகளை அந்த நாட்டினர் தேசிய மயமாக்கக் கூடாது என்று ஆங்கிலேயர் ஏன் கரைந்தனர்; வடகொரியர் தென்கொரியர் மேல் படையெடுப்பது பற்றி அமெரிக்கரும் இரஷியரும்