பக்கம்:அகமும் புறமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 • அகமும் புறமும்

கரைவதன் கருத்தென்ன? சுருங்கக் கூறினால், ‘சுயநலம்’ என்ற சொற்பொருள்தான் இச்செயல்கள் எனலாம். ஆனால் இவ்வாறு கூறினால் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். என்றாலும், உண்மை உண்மையே, இளமையில் உடன் பிறக்கும் இத்தன்னலம் இறுதி வரை மனிதனை விடாது பற்றி இருத்தலும் உண்டு; வயது ஏற ஏற அதிகப்படுதலும் உண்டு. ஒரோவழி ஒரு சிலரிடம் இது குறைந்து நாளாவட்டத்தில் அற்றுப் போதலும் உண்டு.

இரு வகைத் தன்னலம்

இங்கு தன்னலம் என்று கூறுவது தனிப்பட்ட ஒருவனுடைய நலத்தையும், ஓர் இனத்தின் நலத்தையும் குறிப்பிடுவதாகும். தனிப்பட்ட ஒருவன் தன் சொந்த நன்மையை விட்டுவிட்டுப் பிறருடைய நலத்தை நாட முற்படும் பொழுது அது உயர்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது உண்மைதான். ஆனால், ஓர் இனம் முழுவதும் கூடித் தன் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு அதன் பொருட்டு பிற சமூகத்தின் அல்லது இனத்தின் நலனைப் பாதிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், அதுவும் தன்னலம் என்றுதானே குறிக்கப்படும்? இந்தப் பரந்த பொருளிலும் முதலிற் குறித்த குறுகிய பொருளிலும், ஆக இரு பொருள்களிலுமே ‘தன்னலம்’ என்ற சொல் இங்குப் பயன்படுத்தப் படுகிறது.

தன்னலம் குழந்தையிடம் மிகுதியாகக் காணப்படுவதற்கு மனத்தத்துவ நூலார் பல்வேறு காரணங்கள் காட்டுவர். அவை நமக்குத் தேவை இல்லை. தன்னிடம் உள்ள இப்பண்பைக் குழந்தை மறைக்க முயல்வதில்லை. ஆனால், பெரியவர்கள் கூடுமான வரை இதைப் பிறர் அறியாதபடி நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு அனைவரிடத்திலும் காணப்பட்டாலும், இப்பண்பு உயர்ந்தது