பக்கம்:அகமும் புறமும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 65

என்று கூறுவதற்கில்லை. மிகத் தாழ்ந்த ஒரு குணந்தான் இது. இப்பண்பு நிறைந்த ஒருவன் சமுதாயப் பிராணி அல்லன். பலருடன் கூடி வாழ அவன் தகுதி அற்றவனே ஆவன். ஆனால், இப்பண்போடு பிறக்கும் ஒருவன் தக்க வகையில் சமுதாயத்தில் வாழ வேண்டுமாயின் அதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது, இதனைக் கூடுமானவரை களைந்து எறிவதுதான். எவ்வளவுக்கெவ்வளவு இது ஒருவனிடமிருந்து களையப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் சிறந்தவன் ஆகலாம்; சமுதாயத்தில் சிறப்புடனும் வாழலாம்.

சீர்திருத்தம்

எவ்வாறு இதனைக் களைவது? நம்மையும் அறியாமல் நாம் சீர்திருந்தத்தான் செய்கிறோம்.குழந்தையாய் இருந்தபொழுது ஒருவருக்கு ஒன்று தர மறுத்தவன், பெரியவன் ஆனவுடன் தன் மனைவி மக்கள் என்பவர்க்குத் தன் பொருளைப் பகிர்ந்து கொடுக்க முன் வருகிறான்; ஏன்? பல சமயங்களில் தன் நலந்தீங்குகளைப் பாராது அவர்கள் நலத்துடன் இருக்கப் பாடுபடுகிறான். இப்பொழுது பழைய தன்னலம் ஓரளவு அகல்கிறது. இன்னுஞ் சில காலங் கழித்துத் தன் மனைவி மக்கள் என்ற நிலைக்குப் பிறகு தன் சுற்றத்தார் என்பவர்கட்காகவும் தன்னுடைய வாழ்க்கை உளது என்பதை உணரத் தலைப்படுகிறான். அதன் பின்னர்த்தான் வாழ்க்கை நடத்தும் இடம், தெரு, ஊர், மாவட்டம், நாடு என்று அவனுடைய பற்று விரிவடையக் காண்கிறோம். ஆதியில் இருந்த தன்னலமே மாறி இங்ஙனம் விரிந்து இடம் தருகிறது. ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் என்றும் ஒரே மாதிரியாக இருப்பதையும் உலகிடைக் காண்கிறோம். மனைவி மக்களக்குச் சோறு போடுவதைக்கூடத் தருமக் கணக்கில் எழுதும் ஒப்பற்ற பிறவிகள் அவர்கள். ஆனால்,