பக்கம்:அகமும் புறமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 • அகமும் புறமும்

பெரும்பாலார் முன்னர்க் கூறிய முறைப்படி விரிந்து செல்லும் பற்றுடையவரேயாவர்.

இனி இத்தன்னலம் ஏன் இவ்வாறு பரிணமித்து விரிகிறது என்பதைக் காண்டல் வேண்டும். இது தானாக விரிவடையும் ஒன்றா,அல்லது நாமாக இதனை விரிவடையச் செய்ய வேண்டுமா? நாமாகத்தான் இதனை விரிவுபடுத்த வேண்டும். மனித மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கல்லாகும் இத்தன்னலம் என்பது. இதனை அப்பால் புரட்ட வேண்டுமானால், வலுவான ஓர் இரும்புக் கம்பி வேண்டும். அக்கம்பிதான் "அன்பு’ என்பதாகும். அன்பு எனும் கம்பியின் அடியில் 'உறுதி' என்னும் ஆப்பை வைத்து நெம்பினால், தன்னலம் என்னும் பெருங்கல் புரண்டு விடும்.

அன்பு

அன்பு என்பதும் இயற்கையில் மனித மனத்தில் அமைந்து விட்ட ஒரு பண்பாகும். இதனை நன்கு வளர்ப்பவரே முழு மனிதன் ஆகமுடியும், இஃது இல்லாதவரை மனித இனத்திற்கூடச் சேர்த்தல் அரிது என்பர் ஆசிரியர் வள்ளுவர்.


என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்.”

(குறள்-77)


அன்பின் வழியது உயர்நிலை; அஃதுஇல்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

(குறள்-80)

என வரும் குறட்பாக்கள் இக்கருத்தை வலியுறுத்தல் காண்க. இவ்வன்புடையாரே சமுதாயத்தில் நன்கு வாழ முடியும். தன்னைத்தானே பெரிதும் பற்றி நிற்கும் இந்த அன்பு விரிந்து முதல் முதலில் குடும்பத்தில் படருகிறது.