பக்கம்:அகமும் புறமும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 67

அந்நிலையை எளிதில் அறிந்துகொள்ள இயலும், எப்பொழுது ஒருவனுக்குக் குழந்தைகளிடம் உண்மை அன்பு சுரக்கிறதோ,அப்பொழுது ‘குழலும், யாழும்’ ஓரளவு அவனுக்குச் சுவை குறைந்துவிடும். அவர்கள் மெய் தீண்டியவுடன் உடலுக்கு ஒரு புதிய இன்பம் தோன்றும்.அவர்கள் சிறு கை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிமையுடையதாகக் காணப்படும். தனது ஐம்பொறிகளாலும் அவர்களுடைய இன்பத்தை ஒருவன் அனுபவிக்கத் தொடங்குகையிலேதான் அவன் அன்பு முழு விளக்கம் பெற்றதென்று கூறமுடியும்.

இத்தகைய அன்பு ஒன்றே மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ வகை செய்து, பின்னர் அவனை வானுறையும் தெய்வத்துள்ளும் ஒருவனாகச் செய்கிறது. தன்னலம் போல இயற்கையாகவே ஒருவன்மாட்டுத் தோற்றுகிற இந்த அன்பானது, அவனாலேயே போற்றி வளர்க்கப்படல் வேண்டும். அவ்வாறு வளர்ப்பதனாலேயே அவன் சயமுதாயத்தில் சிறந்த உறுப்பினன் ஆதல் கூடும். முன்பின் அறியாதாரிடத்து அன்பு செலுத்திப் பழகுதல் எளிதன்று. எனவே, தன் மக்களிடத்திலேயே அதனை முதலிற்செய்து பழக, ஆசிரியர் வழி வகுத்தார். தன்னலம் என்னும் பேய் பிடித்தவனை அப்பேயினிடத்திருந்து விடுவிக்கவே குழந்தைச் செல்வம் பயன்படுகிறது.

இசை வெறுக்கிறதா?

இசை வெறுக்கிறதா உங்கட்கு? குழலும், யாழும் வெறுப்புத் தட்டுகின்றனவா? இவ் வினாவைக் கேட்டால் விடை தரப்பலரும் கூசுவர். உலக மகாகவி ‘ஷேக்ஸ்பியர்’ கூறியது போல 'இசையில் ஈடுபடாதவன் எக்குற்றவமும் செய்வான்', என்ற முறையில் தம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற கருத்தால் உண்மை கூற மாட்டார்கள். உலகில் பிறந்த மக்கள் அனைவரும்