பக்கம்:அகமும் புறமும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 69

முன்னர் உள்ள குறளிலும் ‘அவர்தம் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு’ என்று கூறப்பெறுகிறது. இவ்வாறு இரண்டு இடங்களிற் கூறவேண்டுமாயின், தக்க காரணம் இல்லாமல் ஆசிரியர் கூறமாட்டாரன்றோ?

இசையில் ஈடுபடுபவர்

குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளில் இசை தோன்றுகிறது. இந்த இசையில் அனைவருமா ஈடுபடுகின்றனர்? இல்லையே! காரணம் என்ன? சிலர் இசையில் தம்மையே மறந்துவிடுகின்றனர்; சிலர், இசையைத் தலையிடியாகக் கருதுகின்றனர். ஈடுபடுத்தும் இயல்பு இசையினிடம் மட்டும் காணப்படுமானால், அனைவரையுமல்லவா அது ஈடுபடுத்த வேண்டும்? எனவே, இசையில் ஈடுபடுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு என்பது விளங்கும். ஒன்று, இசை ஈடுபடுத்தும் தன்மை பெற்றதாய் இருத்தல் வேண்டும். இரண்டாவது, அதனைக் கேட்பவர் தக்க மனநிலை உடையவராய், பண்பட்ட மனம் உடையவராய், இருத்தல் வேண்டும். இவை இரண்டும் சேரும்பொழுது இசை இனிமையாய் இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடைபெறுகிறது என்பதைக் காண்டல் வேண்டும்.

நல்ல பண்பட்ட மனம் உடைய ஒருவர் இசையைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நான்கு பொறிகளும் வேலை அடங்கச், செவி ஒன்று மட்டுமே தொழிற்படுகிறது. மனமும் அச்செவிக்கு உறுதுணையாய் இருந்து இசை இன்பத்தில் ஈடுபடுகிறது. கேட்கக் கேட்க மனம் அடங்கி ஒன்றிவிடுகிறது. இந்த ‘ஒன்றல் தன்மை’ (Harmony) தான் இசை நமக்குத் தரும் பெரிய செல்வம். இந்நிலையில் ஒன்றி இருக்கும் ஒருவருக்கு மனம் மாறுபட்டாலும் இசை 'அபஸ்வரம்’ ஆகிக் கெட்டாலும் மறுபடியும் ஒன்றல் தன்மையை