பக்கம்:அகமும் புறமும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 • அகமும் புறமும்

அமைதியுடன் வாழ்ந்துவிட முடியுமா? எவ்வளவு பணம் இருப்பினும் மனிதர் உதவி வேண்டும், என்பன போன்ற பழமொழிகள் எவ்வளவு உண்மையை அறிவுறுத்துகின்றன! மனிதர் உதவி தேவை என்றால் அதைப் பெறுதல் யாங்ஙனம்? எல்லா மனிதரையும் விலைக்கு வாங்குதல் என்பது நடைபெறக் கூடியதா? பணத்தைக் கண்டு பரக்க விழிக்காதவர்களை என் செய்வது? இத்தகையவர்களை நமக்கு நண்பர்களாகச் செய்வது எது? ஆசிரியர்,

அன்புஈனும் ஆர்வ முடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

(குறள்–74)

என்ற குறளால் விடை கூறுகிறார். ஏனைய வசதி ஒன்றும் இல்லாதவர் பலர், பல நண்பர்களைப் பெற்று அரிய காரியங்களைச் சாதித்தலைக் காண்கிறோம். இவர்கள் செல்வாக்கின் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், 'அன்பு என்ற ஒன்றைக் கொண்டே இவர்கள் இப்பெருநிலையை அடைந்தார்கள் என்பதை நாம் நன்கு அறியலாம். அன்புடையார் சமுதாயத்தில் பெருஞ்செல்வாக்கு அடையக் காரணம், அவர்கள் தமக்கு என ஒன்றையும் ஏற்காமைதான் 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' (குறள்–2) என்ற குறளை உண்மையிலேயே நடத்திக் காட்டும் இயல்பினர்க்கு வேண்டும் சிறப்புத்தானே வந்து எய்தும்.

பழைய குறள்–புதிய பொருள்

உலகிடை நடைபெறும் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து பார்த்தால் அனைத்தும் அன்பின் வழிப்பட்ட செயல்களாகவே இருக்கக் காணலாம். ஒருவனுக்கு மற்றவன் செய்யுந் தீங்குகூட அன்பினால் செய்யப்படுவதுதான் என்றால், யார் நம்புவார்கள்! ஆனால், உண்மையில் உலகில் நடைபெறும் அனைத்துச் செயல்களும் அன்பி-