பக்கம்:அகமும் புறமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 • அகமும் புறமும்



அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

(குறள்-76)

என்று கூறினார். தாய் தந்தையர் மகனைக் கடிவதும், மருத்துவர் அறுத்து ஊறுபோக்குவதும் அன்பால் விளைந்த செயலேயன்றி வேறு இல்லை.

எனவே, சமூகத்தில் வாழ்பவனுக்கும், துறந்து வீடுபேற்றை நாடுபவனுக்கும் அன்பு இன்றியமையாது வேண்டப்படும் என்பது இதனாற்பெறப்படும்.

இல்லறப் பயன்

அன்புடையார் செய்யும் இல்லறத்தில் விருந்தோம்பல் மிகுதியாகக் காணப்பெறும். விருந்தை உபசரிப்பதில் என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்று வினவத் தோன்றுகிறதன்றோ? விருந்தினரை எவ்வளவு தூரம் ஒருவன் போற்றி வாழ்கிறானோ, அவ்வளவு தூரம் அவன் சமுதாயத்தில் சிறந்து வாழ முடியும். விருந்து என்றவுடன் தன் உற்றார் உறவினருக்கு ஒருவன் செய்யும் உபசரிப்பைப் பற்றி நினைந்து விடக்கூடாது. உற்றார் உறவினர் என்பவர் வேறு, விருந்து வேறு என்பதைக் காட்டவே ‘தென்புலத்தார், தெய்வம் விருந்து ஒக்கல், தான்’ (43) என்று ஐந்து வகைப்படுத்திக் காட்டினார் ஆசிரியர். இங்கு ஒக்கல் என்று அவர் குறிப்பிடுவது உற்றார் உறவினர் என்பவரையேயாகும். எனவே, விருந்து என்றது. இவரினும் வேறுபட்டாரையாகும். புதியவர்களாக வருபவர்களும், என்றோ ஒரு நாள் வருகின்றவர்களுமே விருந்து என்ற தொகையில் அடங்குவார்கள். மேலே கூறிய ஐந்து வகையினரையும் உபசரிக்க வேண்டுவது இல்லறத்தானின் கடைமையாய் இருப்பினும், அவ்வைவர் உள்ளும் தலையா யவர் ‘விருந்தினர்’ என்பதைக் காட்டவே ‘அன்புடைமை’