பக்கம்:அகமும் புறமும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 85

உள்ளனர் என்பது இவர்கள் கூற்றாக அமைந்த பாடல்களைப் படிப்பார் நன்கு உணர இயலும். இந்நிலையான பாடல்கள் நாட்டில் அன்றும் இருந்த உணவுப் பஞ்சத்திற்கு அறிகுறியோ என நினைய வேண்டி உளது. இத்தகைய சூழ்நிலையில் பாட வந்த ஆசிரியர், விருந்தோம்பலை மிகுதிபடுத்திக் கூறியது சாலப் பொருத்தம் உடையதே.

சூழ்நிலை நாட்டில் இவ்வாறு இருந்தமையின் விருந்து இடுபவர் தம்மைப் பெரியராக நினைத்துக் கொண்டு,விருந்தினரை மட்டமாக நினைக்கவும் இடம் உண்டு அன்றோ? அனைவரும் இவ்வளவு மோசமாய் இராவிடினும், ஒரு சிலராவது இத்தவற்றைச் செய்தல் இயல்பேயன்றோ? இது கருதியே ஆசிரியர்,


மோப்பக் குழையும் அனிச்சம்; முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து
(குறள்–190)

என்று கூறுவாராயினார். விருந்திடுபவர் தாம் செய்வதை, ஏதோ பெரிய உபகாரமாக நினையாமல், கடமையைச் செய்வதாகவே நினைக்கவேண்டும்.அதிலும்,மகிழ்ச்சியோடு கடமையைச் செய்வது எவ்வளவு சிறப்புடையது! வெறுஞ்சோற்றை இட்டு, இன்முகம் காட்டவில்லையாயின், இட்டும் பயன் இல்லையாய் விடும். எனவே, இன்முகம் காட்டலே விருந்திடுவதினும் இன்றியமையாதது என அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.விருந்தோம்பல் இல்லறத்தானுக்கு இன்றியமையாத கடமை என்றால், இன்முகங் காட்டி விருந்தினரை உபசரித்தல் அவ்விருந்து இடுதலினும் தலையாய கடமையாகும். அன்றைய தமிழர்களுக்கு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பொன்மொழிகள் இன்றைய தமிழ் நாட்டிற்கும் எவ்வளவு தேவை என்பதை உன்னிப் பார்ப்போமாக.