பக்கம்:அகமும் புறமும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 87

மற்றவரும் அழகுடையது என்று ஒப்புமாறு இல்லை. இன்னுங் கூறப்போனால், அழகே வடிவமானது என்று ஒருவரால் மதிக்கப்படும் பொருள், மற்றொருவரால் அழகற்றது என்றுங் கூறப்படுதலைக் காண்கிறோம்.

அவ்வாறாயின், அழகென்பது பொருளினிடத்து இல்லை; காண்பான் மனத்திடமே உள்ளது என்றாவது கூறிவிடலாமா? எனில், அதுவும் இயலுவதாக இல்லை. காண்பான் மனத்திடத்தேதான் அழகு இருக்கிறதெனில், பொருள் இல்லாமலும் அவன் அழகை அனுபவிக்க வேண்டும். அதுவும் இயலாத காரியம். எனவே, ‘அழகென்பது பொருளினிடத்தும் காண்பான் மனத்தும் ஒருசேரத் தோன்றுகிற ஒன்று’ என்றுதான் நினைய வேண்டியுளது. இக்கருத்தை மனத்துட்கொண்டு பார்க்கும் பொழுது பெண்ணிடத்துக் காணப்படும் அழகும் இம்முறையில் அமைவதே என்பது விளங்கும்.

பெண்ணிடத்து இருக்கும் அழகு காண்பானுடைய மனநிலைக்கு ஏற்பக் காட்சி நல்குகிறது. தலைவன் ஒருவன். தலைவி ஒருத்தியைக் கண்டு தன் மனத்தை அவளிடம் பறிகொடுக்கிறான். அவள் புற அழகே முதன் முதலில் அவன் காதல்கொள்ளக் காரணமாயிற்று. அவனுக்கு இக்காதல் உணர்ச்சி தோன்றுவதன் முன்னர்த் தோன்றிய உணர்ச்சியாதாய் இருத்தல் கூடும்? அழகுடையவர்களை அவன் இதற்குமுன் கண்டதில்லையா? நூற்றுக்கணக்கானவர்கள், சிறந்த அழகுடையவர்களைக் கண்டதுண்டு; ஆனால், அவர்களிடம் ஈடுபட்டு அவன் மனத்தை இழக்கவில்லை. இப்பொழுதோ எனில், இந்தத் தலைவியைக் கண்ட மாத்திரத்தில் தன்னையும், தன்மனத்தையும் இழந்துவிட்டான். இவ்வாறு இழக்க மூலகாரணமாய் இருந்த உணர்ச்சி யாது? எவ்வளவு, ஆராய்ந்து பார்த்தாலும் ‘வியப்பு’என்ற உணர்ச்சியே அவன் முதலில் பெற்றது