பக்கம்:அகமும் புறமும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 89

பாலில் மிகுதியும் இடம்பெற்று விளங்கும் தலைவியின் உறுப்பு கண்களேயாம். ‘கண்ணிற் சிறந்த உறுப்பில்லை’, என்ற பழைய மூதுரையை நினைந்து இவ்வாறு கண்களுக்குப் பெருமை தருகிறாரா ஆசிரியர்? ஆம்,அம்முதுமொழியின் சிறப்பை உள்ளவாறு உணர்ந்தமையாலேதான் வள்ளுவர் இவ்வாறு கண்களை விவரிக்கிறார்.

தலைவியின் அழகில் தலைவன் ஈடுபடுவது. இரு வகைகளில் அமையலாம். ஒன்று அவளுடைய புற அழகில் ஈடுபடுவது. தோல், தசை இவற்றாலாய கூட்டின் அழகில் ஈடுபடுபவர் பலருண்டு. கவிஞரிலும் பலர் இத்தகையரே. ஆனால், சிறந்த கலைஞருக்கு இவ்வழகு மட்டும் போதாது. எனவே, அவர் அக அழகைக் காண முற்படுகின்றார். சங்ககாலப் பாடல்களில் தலைவியை வருணிக்கின்ற பாடல்கள் எண்ணில. என்றாலும், அவற்றுள் பெரும்பான்மையானவை அவளுடைய கண்களைக் கூறாமல் விடுவதில்லை. தலைவியின் கண்களைத் தாமரை, வண்டு, கயல் என்பவற்றோடு உவமிக்கும்பொழுது வடிவு உவமையாக மட்டும் இராமல் வேறு காரணங் கருதியும் உவமிக்கப்படும். தலைவியின் உடல் அழகு சிறந்துளதென்பதில் ஐயமின்று.

ஆனால், இத்துணை அழகுடைய உடம்பினுள் உறையும் மனம் எத்தகையதோ! எவ்வாறு இம்மனத்தைக் காண்பது? அவளுடைய பேச்சால் ஓரளவு காணலாம் என்பது மெய்ம்மைதான். ஆனால், பேசும் முன்னர், பேசக் கூடிய இயல்பும் தகுதியும் வாய்ந்தவளா என்பதை அறிவது யாங்ஙனம்? தலைவியின் மனம் உடலைப் போல் மென்மையும் கருணையும் நிரம்பியதா என்று அறிய வேண்டும். அவள் உறுதிப்பாடு உடையவளா என்பதையும் அறிதல் வேண்டும். இவை அனைத்தையும் அறிய ஒரே ஒரு வாய்ப்புத்தான் உண்டு. அவளுடைய மனத்தை