பக்கம்:அகமும் புறமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 • அகமும் புறமும்

அறியும் ஒரு பலகணி (ஜன்னல்) வேண்டும். மனத்தைப் பிறர் காணுமாறு காட்டும் பலகணி யாது?

ஒருவருடைய கண்களே மனத்தை அறிவிக்கும் பலகணி என்பர். ஏனைய புலவர்களைப் போலத் தலைவியை வருணிக்கப் புகுந்துவிடாமல், வள்ளுவர் இரண்டாம் குறளிலேயே தலைவியின் கண்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். தலைவன், ‘இவள் தேவப் பெண்ணோ, மயிலோ!’ என்று ஐயுற்றுத் தெளிந்தான் என்று முதற்குறளில் கூறிய கவிஞர், இரண்டாம் குறளில்,


நோக்கினாள் நோக்குளதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்னது உடைத்து.
(குறள்–1082)

என்று தலைவன் ஈடுபடும் உறுப்பினைக் கூறியது அறிதற்குரியது. நோக்கினாள் என்று தலைவன் கூற்றாகத் தலைவி குறிக்கப்படுகிறாள். தலைவியை எத்தனையோ சொற்களால் தலைவன் குறிக்கலாம். அவ்வாறிருந்தும், நோக்கினாள் (பார்க்கின்றவள்) என்று கூறுதல் வியப்பன்றோ? இதிலிருந்து அறியப்படுவதொன்று உண்டு. தலைவன் தலைவியினுடைய பார்வைக்கு அடிமையாகி விட்டான். எனவே, அவளைக் குறிக்க நேர்ந்த முதல் சொல்லிலேயே எந்த உறுப்பில் ஈடுபட்டானோ அந்த உறுப்பாலேயே அவளைக் குறிக்கிறான். அன்றேல், ‘நோக்கினை உடையாள்’ என்று குறிப்பது பொருளற்றுப் போய்விடும்.

அடுத்து வரும் குறள்களிலும் தலைவியின் கண்கள் ‘பேர் அமர்க்கண்’, ‘அமர்த்தன கண்,’ ‘நோக்கம் இம் மூன்றும் உடைத்து’, ‘இவள் கண்’, ‘மடநோக்கு’ என்று ஐந்து இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.

தலைவியின் கண்களுக்கு இத்துணைப் பெருமை தந்தது போதாது என்று கருதிய வள்ளுவப் பெருந்தகை