பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நடந்தது பிறகு தெரியுமா தோழர்களே! மனைவி, மக்களைக் கொன்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தான் என்று தண்டிக்கப்பட்டான். ஐகோர்ட்டுக்கு மனு செய்து கொண்டான், “பசியால் வாடிய நான் இந்த பாருலகைப் பிரிய விருப்பப்பட்டேன். பிடித்தார்கள்; தண்டித்தார்கள்!” என்று! வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதிகள், அவனை விடுதலை செய்தார்கள், அவன் குற்றவாளி அல்லவென்று. அவன் அந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்தது அரசாங்கத்தின் கவனக் குறைவேயாகும் என்று கூறி விட்டார்கள். இப்படி நீங்களோ, நானோ, ஆல்பர்ட் ஜேசுதாசனோ கூறவில்லை, தோழர்களே! இந்த ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீதிபதிகள் கூறுகிறார்கள், அவனது மனைவி மக்கள் மடியக் காரணம் ஆளத் தெரியாதவர்களால் வந்த வம்பு என்று!

மற்றொரு அதிசயத்தைப் பாருங்கள். பசியால் வாடி ஒருவன் வேறு வழியின்றி ஓடினான், சுடுகாட்டை நோக்கி. தவம் புரிவதற்கல்ல. வெந்து கொண்டிருந்த பிணத்தை ருசி பார்க்க! பிணத்தின் மீதிருந்த நெருப்பைத் தள்ளினான். துடைக் கறி வெந்து இளகி இருந்தது, சூடாக. பிய்த்தான், தின்றான், பசி தீர,—பசியின் கோரம் தணிய. ஆனந்தம் அவனையும் அறியாமல் வந்து விட்டது. ஆடினான்; ஆனந்தத் தாண்டவம் அல்ல—அப்போதைய பசி தீர்ந்து விட்டதே என்று. ஊரார் பார்த்தனர்; போலீஸாருக்குத் தெரிவித்தனர். போலீசார் ஓடோடியும் வந்தனர்; பிடித்துக் கொண்டனர். “உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டனர். “இல்லை! நான்