பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
உனது வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டோடு நாட்டை இணைத்து, மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல்! பார்த்து மகிழ்ச்சி கொள்!
அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை;
அணைத்துக் கொள்; உன்னைச் சங்கமம் ஆக்கு!
மானிட சமுத்திரம் நன்றென்று கூவு
பிரிவிலை! எங்கும் பேதம் இல்லை.
உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் .....

மற்றொரு பாடலில் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்

1941ல் நாஜிப் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கிய காலத்தில், சோவியத் யூனியனைத் தாக்கிய தவறினாலேயே ஹிட்லரின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் பாரதிதாசன் ஒரு கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

எத்தனை நாட்டின் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!

39