பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் சாஸனம்

93

1.கொல்லாமை

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் ஆக்கினையாக இத்தர்மலிகிதம் வரையப்பட்டது. இங்கே (என் தலைநகரத்தில்) யாதொரு பிராணியையும் பலியாகங்களுக்காக வதை செய்யக் கூடாது. ஸமாஜங்களில் நடக்கும் விருந்தும் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால் ஸமாஜங்களில் பலவித தோஷங்களுண்டென்று தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனுக்குத் தெரியும். ஆனால் சிற்சில ஸமாஜங்கள் நல்ல வையென்று அவர் அபிப்பிராயப்படுகிறார். முன் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனின் மடப்பள்ளியில் லக்ஷக்கணக்காகப் பலவித உயிர்ப் பிராணிகள் கறிக்காக வதை செய்யப்பட்டு வந்தன. இக் கட்டளை இடப்படும் இச் சமயமும் தினமும் மூன்று பிராணிகள் கொல்லப்படுகின்றன. அவையாவன, இரண்டு மயில்களும் சிலவேளைகளில் அதிகப்படியாக ஒரு மானும். இனிமேல் இம்மூன்று பிராணிகள் கூட வதை செய்யப்பட மாட்டா.

மொத்தம் 8 வாக்கியங்கள்.

I. ஸமாஜங்களைப்பற்றி கௌடலயம் என்ற அர்த்த சாஸ்திரத்தில் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. இவை பலகாலமாக ஏற்பட்ட ஜாதிமத ஸபைகள். விருந்துக்கச்சேரி, பாட்டு, கூத்துக்கள் இச் சபைகளில் அதிக மும்முரமாக நடந்துவந்தன, அரசன் இச்சபைகளைப்பற்றி மிக்க ஜாக்கிரதையா யிருக்கவேண்டுமென்று ௸ அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.