பக்கம்:அஞ்சலி.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 187

“இதில் உனக்கென்ன சிரத்தை? இது ஆண்கள் விளையாட்டு” என்றேன்.

“விளையாட்டில் ஆண் வியைாட்டு பெண் விளையாட்டாவது? எனக்கு நன்றாய்க் காற்றாடி விடத் தெரியும். நான் சொல்றேன் பார். இந்த சிவப்புக் காற்றாடிதான் ஜெயிக்கப்போகிறது.”

எட்டிப் பார்த்தேன். “சிவப்புக்காற்றாடி சின்னதாயிருக்கிறதே!”

“பெரிது சின்னது கணக்கில்லை. காற்றாடி விடுபவனைப் பொறுத்திருக்கிறது. வேணுமானால் அஞ்சுரூபா பந்தயம். சிவப்புக் காற்றாடிதான் ஜெயிக்கப் போகிறது."—அவள் கவனம் முழுதும் காற்றடிமேல்தான் இருந்தது.

திடீரென என் அடிவயிற்றில் ஏதோ புரண்டாற்போலிருந்தது. நான் பூமியிலில்லை, ஒரு கயிற்றின் நுனியில் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தேன். பூமியில் காயத்ரீ நின்றுகொண்டு கயிற்றைப்பிடித்தபடி ஆகாயத்தில் என் கதியை அடக்கி ஆண்டுகொண்டிருந்தாள். காற்றைக் கிழித்துக்கொண்டு வெள்ளைக் காற்றாடியை நோக்கி விரைந்தேன். காற்றின் கூர்மை கத்திபோல் என் உடலை நார்நாறாய் உள்ளே அறுத்தது. என் சதைக்கடியில் என் உடல் இரத்தவிளாறாயிற்று.

“அப்பா நீங்கள் கொலைகாரர் கொலைகாரர் கொலைகாரர்!”

தலை சுற்றிற்று. நெற்றியைக் கெட்டியாய் இரு கைகளிலும் பிடித்துக்கொண்டேன். உள்ளே சக்கரங்கள் சுழன்றன. காதண்டை கலகலவென நகைப்பு.

“நான் என்ன சொன்னேன் பார்த்தையா? எடு பந்தயப் பணத்தை!”—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/197&oldid=1033491" இலிருந்து மீள்விக்கப்பட்டது