பக்கம்:அஞ்சலி.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 59

அவன் முகம் அனல் குழம்பிற்று. “இதுதான்—” திடீரென அவள் கையைப் பிடித்து மூர்க்கமாகத் தன் பக்கம் இழுத்தான். கண்கள் திரிகள்போல் எரிந்தன.

“ஏன், நீ கேட்ட நாள் நாளையாகவே இருக்கலாம்; இப்போது உன் வயிற்றில் உருவாகிவரும் உயிரே அந்தக் குழந்தையாயிருக்கலாம்.”

அவள் கூந்தலைப் பிடித்து இழுத்துத் தலையை நிமிர்த்தினான்.

“நாம் நம்மையறியாமலே நம்முடைய உண்மையான தன்மையை அறிய முயன்று கொண்டிருக்கிறோம். அந்தத் தன்மையை நம் பிள்ளையின் மூலம்தான் நாம் அறிய முடியும். தகப்பன்—பிள்ளை, தாய்—பிள்ளை, மறுபடியும் பிள்ளை, தகப்பன்; சங்கிலியின் ஒவ்வொரு கொக்கிதான் வித்திலிருந்த மரத்திலிருந்தொரு வித்து. ஆனால் வித்தெல்லாம் வித்தல்ல; ஒருநாள் முத்தானதொரு வித்து, ஒரே முத்து. அதுதான் அந்த நாள். மற்றதெல்லாம் அம்மகனுக்குக் காத்திருக்கும் வேளைதான்.”

மாஞ்சிக்கு மண்டை கிறுகிறுத்தது. அவன் மடியில் தலைகவிழ்ந்தாள். அவன் விரல்கள் அவள் கூந்தலின் வங்கிகளில் வளைந்து நெளித்தன விளக்கின் சுடர் குன்றி நீலமாகி அவர்களை இருள் சூழ்ந்தது.

***

நீனா ஒடிவந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டாள்.

“அம்மா, அம்மா! அப்பா வந்துாத்தாடீ...”

பின்னாலேயே மீனாவும் வந்தாள்.

“அம்மா, ஆமாம்மா, அப்பா!”

ஜமதக்னி நீனாவின் காதைத் திருகினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/69&oldid=1033411" இலிருந்து மீள்விக்கப்பட்டது