பக்கம்:அஞ்சலி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 லா. ச. ராமாமிருதம்

எனக்கு வயது ஐந்து அல்லது ஆறு இருக்கும். அக்கா ஜன்னலண்டை உள்ளங்கையில் மோவாயோடு ஏதோ யோசனை பண்ணிக்கொண்டிருந்தாள் அவள் உட்கார்ந்திருந்த விசுப் பலகை கொஞ்சம் உயரம். அதன்மேல் நான் ஏற முடியாமல் ஏறி, அவள் மடியில் உட்கார்ந்துகொண்டு அவள் கைத் தழும்பைத் தொட்டுத் தடவிப் பார்த்து “என்ன அக்காது?” என்றேன்.

அவள் பதில் பேசாமல் கண்ணைக் கொட்டாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்னக்கா என்னையே இப்படிப் பாக்கறே? ஏங்க்கா அழறே?” கன்னத்தில் வழிந்த கண்ணிரை அப்படியே ஒரு விரலால் வழித்து விசிறி எறிந்தாள். ‘ஒண்னுமில்லேடா கண்ணு!’ என்று என்னை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டாள். ‘அது நீடா!’

“எது, இதுவா?” கைத் தழும்பை மறுபடியும் நான் வியப்புடன் தடவினேன்.

அவள் பதில் பேசவில்லை. அவள் கன்னங்கள் குழிந்து பளபளத்தன. என் முகத்தை இறுகப் பிடித்துக்கொண்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். இப்போதும் என் எலும்பு உருகுகிறது.

அவள் வெளிச்சம் என்மேல் ஆடியவண்ணம் இருந்தது. அவள் பார்வையை வாசற்படியிலிருந்து பள்ளிக்கூடம் வரை தாங்கிச் செல்வேன். வீட்டுக்குத் திரும்புகையிலும் அந்தப் பார்வை எனக்காகக் காத்திருக்கும். அவள் கூட இல்லை. அவள் பார்வை. நடுக்கூடத்தில் ஏற்றி வைத்த விளக்குமாதிரி, தான் இருந்த இடத்திலிருந்து கொண்டே தன்னைச் சுற்றிலும் தன்னொளியை வீசிக்கொண்டிருப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/74&oldid=1033416" இலிருந்து மீள்விக்கப்பட்டது