பக்கம்:அஞ்சலி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 லா. ச. ராமாமிருதம்

அற்புதமான ஹ்ருதய புஷ்பமாய் மாறிவிடுகிறது” அவன் முகத்தில் அவன் வர்ணிக்கும் புஷ்பத்தின் செந்திட்டு படபடத்தது.

“பிறகு இவ்வளவு வேலைப்பாடுகள் நிறைந்த இப் பூ மலர்ந்து மெதுவாய் வாய் திறக்க, அதன் கிண்ணத்திலிருந்து விதவிதமான பழைய உருவங்களும், புது உருவங்களும் புறப்படுகின்றன. நான் அடையாளம் கண்டு கொள்ளும் உருவங்கள், கண்டுகொள்ளாத உருவங்கள், நேற்றைய உருவங்கள், இன்றைய உருவங்கள், இனி மேலாய உருவங்கள்—ஆனால் உள்ளுணர்வில் எனக்குத் தெரிந்த என் உருவங்கள்...”

“புரியல்லே, புரியல்லே!— எனக்கு வேண்டாம்! வேண்டாம்!” மாஞ்சி செவிகளைப் பொத்திக்கொண்டாள்.

“நீ கேட்டாய். நான் சொன்னேன்— அல்லது சொல்லப் பார்க்கிறேன். நான் இவைகளைப் பார்த்தேன் என்றால் இந்தக் கண்களால் பார்த்தேன் என்று அர்த்தமல்ல. இந்தக் கண்ணையும் மீறிய பார்வையில் பார்த்தேன்.”

“என்ன சொல்றேள்?”

அவள் முகத்தின் திகைப்பு வேதனையை விளைவித்தது. அவன் அவளைத் தன் பக்கமாய் இழுத்து, முகத்தில் முத்தமிட்டான்.

மாஞ்சி குழந்தைதான். அவள் கவனம் சட்டென மாறிவிட்டது. அவன் மடியில் கிடக்கும் குழந்தையின் முகத்தெதிரில் கையை விளையாட்டுக் காண்பித்துக் கொண்டு விரலைச் சொடுக்கினாள்.

“நம்ம பையனுக்கு என்ன பேர் வைப்போம்? பிச்சைன்னு வைப்போமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/88&oldid=1033427" இலிருந்து மீள்விக்கப்பட்டது