பக்கம்:அடி மனம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அடிமனம்


இந்தக் காட்டு வாத்துக்களை வேட்டையாடுவதிலே ஒருவனுக்கு அலாதியாக ஓர் ஆர்வமிருந்தது. அவனுடைய ஆர்வத்தை ஒரு வெறி என்று கூடச் சொல்லிவிடலாம். துப்பாக்கியாலே சுட்டு ஒரு காட்டு வாத்தை விழ்த்திவிட்டால் அவன் அதை ஒரு பெரிய சாதனை என்று பெருமைப்படுவான். அந்தப் பறவைகளை சுட்டு வீழ்த்த வீழ்த்த அவனுடைய களிப்பு எல்லை கடந்துவிடும். காட்டு வாத்தைச் சுடுவதிலே உனக்கேன் இத்தனை பயித்தியம்? என்று கேட்டால், அதன் மார்புப் பகுதி உண்ணுவதற்கு மிக நன்றாக இருக்கிறது; எனக்கு அதிலே நிரம்பப் பிரியம் என்று உடனே பதில் கூறுவான்.

மேற் போக்காகப் பார்க்கிறபோது அவன் கூறும் பதில் திருப்தியளிக்கக் கூடியதாகத் தோன்றலாம். ஆனால் அவன் காட்டு வாத்துக்களைச் சுடுவதில் காட்டும் வரம்பு கடந்த வெறியைக் கவனித்த போது சிலருக்கு அதிலே சந்தேகமுண்டாயிற்று. அவன் மன நிலைமையை ஆராய்ந்து பார்க்க விரும்பினார்கள். மனப்பகுப்பியல் முறையால் அவனுடைய மனத்தைப் பரிசோதித்த போது ஓர் உண்மை வெளியாயிற்று. சிறு குழந்தையாக இருந்த போது தாயின் மார்பகத்திலே பாலருந்தி அவன் பெற்ற இன்பத்தை அந்தக் காட்டு வாத்தின் மார்புப் பகுதி ஓரளவு கொடுப்பதாக இருந்தது. அவனுடைய தாய் அசைந்தசைந்து நடப்பது அவனுக்கு எப்படியோ வாத்தின் நினைப்பை அவனுக்குச் சிறுவயதிலேயே உண்டாக்கியிருக்கிறது. அன்ன நடை என்று கவிகள் பெண்களின் நடையை அழகாக வருணிக்கிறார்கள். அவனுக்கு அவனுடைய தாயின் நடை வாத்து நடையாகத் தோன்றியிருக்கிறது. ஆகவே குழந்தைப் பருவத்திலே தாயிடம் பாலருந்திப் பெற்ற திருப்தியையும் இன்பத்தையும் அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/11&oldid=1004399" இலிருந்து மீள்விக்கப்பட்டது